wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

காட்டு விலங்குகள் எல்லாம் மிகவும் குதூகலமாக இருந்தன. ஆம். காட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்காட்சி நடக்கப் போகிறது. ..

கண்காட்சின்னா என்ன சும்மாவா? நான்கு வருடங்கள் கழித்து இப்போதுதான் வருகிறது. ஏராளமான அதிசயமான பொருட்கள் இருக்கும். பார்க்கப் பார்க்க சலிக்காது.

பக்கத்துக் காட்டில் ரொம்ப வருஷத்துக்கு முன்னால் வாழ்ந்த, பனை மரம் நீளமிருந்த மலைப்பாம்பின் தோல், உடம்பெல்லாம் கம்பளி போர்த்தியது போல் இருக்கும் பழங்காலத்து யானையின் பாடம் பண்ணப்பட்ட உடல். உயிருடன் இருக்கும் இரண்டு தலைகள் கொண்ட காட்டு ஆடு, வெள்ளைக்காகம், பூனை மாதிரி, யானை மாதிரி எல்லாம் குரலை மாற்றிப் பேசும் கிளி, இது போன்ற ஏராளமான விஷயங்கள் இடம்பெறும். இது மட்டுமல்லாமல், பாம்புகளிடமிருந்து அரிதாகக் கிடைக்கும் நாகமணி, யானையிடம் அபூர்வமாகக் கிடைக்கும் கஜமுத்து போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, வருகிற எல்லாருக்கும் அருமையான பாயசம் வழங்கப்படும்.

நுழைவுக் கட்டணம், ராட்டினம் விளையாட்டு, பாயசம் எல்லாமே இலவசம். சிங்கராஜா வருடா வருடம் தன்னுடைய மிருகங்களை மகிழ்விப்பதற்காக ஒரு திருவிழாவைப் போல இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வந்தது. கடந்த முறை நடந்த கண்காட்சியில் யாரோ ஒரு அபூர்வமான வெள்ளை மானின் தோலைத் திருடிவிட்டார்கள். அதனால் ராஜா மனவேதனைப்பட்டு சில வருடங்கள் கண்காட்சி நடத்துவதையே நிறுத்திவிட்டது. அப்புறம் பல மூத்த விலங்குகள் வேண்டிக் கொண்டதன்பேரில் கொஞ்சம் மனமிளகி, அந்த வருடத்தில், தன் மகாராணியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வாரம் கண்காட்சி நடத்த ஒப்புக்கொண்டது.

கண்காட்சியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் தலைமுறை தலைமுறையாய் சிங்கராஜாவின் குடும்பம் பாதுகாத்து வைத்திருக்கும் அதிசயமான பொக்கிஷங்கள். அதனால் ராஜா இம்முறை காவலை அதிகப்படுத்தி வைத்தது. சந்தேகத்துக்குரிய சில மிருகங்களின் படத்தையும் எடுத்து ரகசியமாய் வைத்திருந்தது. அவை சந்தேகத்துக்கு உரிய மிருகங்கள் என்றாலும் இதுவரை எந்த வழக்கிலும் பிடிபட்டதில்லை. எனவே அவற்றைக் கண்காணிப்பிலேயே வைத்திருந்தது.

ராஜா சந்தேகப்பட்டது வீண் போகவில்லை. கண்காட்சியில் இருந்த நாகமணியைத் திருட ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருந்தது. ஒரு குள்ள நரி, ஒரு எலி, ஒரு எறும்புத் தின்னி மூன்றும் ஒரு குழுவாக இணைந்து நாகமணியைத் திருட சமயம் பார்த்துக் கொண்டிருந்தன. பக்கத்துக் காட்டின் ராஜா அந்த நாகமணிக்கு ஈடாக இரண்டு வருடங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தருவதாக வாக்களித்து இருந்தது.

கண்காட்சி துவங்கிய இரண்டாம் நாளில் திருடர்கள் குழு, பகலில் வந்து நோட்டமிட்டது. அந்த நாள் இரவிலேயே நாகமணியைத் திருடுவதாக முடிவு செய்யப்பட்டது. எலி, நரி, எறும்புத்தின்னி மூன்றும் சந்தேகம் வராதபடி, ஒவ்வொரு காட்சிப் பொருளின் முன்பும் நின்று நல்ல பிள்ளைகள் மாதிரி அது என்ன, இது என்ன? என்று விசாரித்துக் கொண்டிருந்தன.

சமையல்காரர் யானை மாமா அன்று அருமையான பலாப்பழப் பாயசம் செய்திருந்தது. அடடா! பலாப்பழப் பாயசம் அப்படி ஒரு சுவை. யானை மாமாவால் மட்டுமே தூக்க முடிந்த ஒரு கல்லில் ஆன ஜாடியில் பாயசத்தை ஊற்றி வைத்துப் பறிமாறியது. எல்லா மிருகங்களும் பாயசத்தை சப்புக்கொட்டி உறிஞ்சின. அதிலும் எறும்புத்தின்னிக்கு அந்த சுவை நாவிலேயே நின்றது. கெஞ்சி கூத்தாடி யானை மாமாவிடம் இன்னொரு தம்ளர் பாயசம் வாங்கிக் குடித்தது. திருட்டுக் கும்பல் நாகமணி இருக்கும் இடத்தை நன்றாக நோட்டமிட்டது.

இதோ அவை எதிர்பார்த்திருந்த இரவு வேளை வந்துவிட்டது. முன்பக்க வாசலில் மட்டும் ஒரு சிறுத்தை காவலுக்கு நின்றது. பின்பக்கத்தில் ஏழெட்டு பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டிருந்தது. வேறு மிருகம் எதுவும் காவல் நிற்கவில்லை. எறும்புத்தின்னியும், எலியும் கதவில் ஏறி மேற்புரத்திலிருக்கிற துளை வழியாக உள்ளே இறங்கின. நரி வெளியில் நின்று யாரேனும் வருகின்றனரா என்று கவனித்துக்கொண்டது.

ஏற்கனவே நாகமணி இருக்கிற இடத்தைப் பார்த்து வைத்திருந்ததால் மிக எளிதாகவே அந்த இடத்திற்குச் சென்றுவிட்டன. எறும்புத்தின்னி தன்னுடைய உறுதியான ஓடு போன்ற வாலால் கண்ணாடியை அடித்து உடைக்க, எலி அதைக் கைப்பற்றி, இடுப்பில் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டது. வந்த காரியம் எளிதாக முடிந்த சந்தோஷத்தில் இரண்டும் வேகமாய்க்கிளம்பத்தயாராயின.

திரும்பும்போது எறும்புத்தின்னியின் கண்ணில் பாயசம் இருந்த கற்சாடி பட்டுவிட்டது. மீண்டும் அந்த பலாப்பழப் பாயசத்தின் சுவை நாவில் மீண்டும் தோன்றி சலனத்தை உண்டாக்கியது. எறும்புத் தின்னியால்கட்டுப்படுத்த முடியவில்லை. ஜாடியை நோக்கி நகர்ந்தது. எறும்புத்தின்னியின் நாக்குருசி பற்றி ஏற்கனவே எலிக்குத் தெரியும். அது உடனே எறும்புத்தின்னியை எச்சரித்தது.

“அடேய், எல்லாமே நல்லா போய்ட்டுருக்கு. இப்ப போயி நாக்கு ருசிக்கு அடிமையாகி எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுராத. கிளம்புற வழியப் பாரு” என்றது.

எறும்புத்தின்னி பதிலுக்கு,

“ கொஞ்ச நேரந்தாண்டா. உடனே வந்துடுறேன். எந்த பிரச்சனையும் வராது. மிச்சம் மீதியை சாப்பிடுறதால ஒன்னும் குடிமுழுகி போய்டாது. நீ தேவையில்லாம பயப்படாதே” என்றது.

“ சொல்றத சொல்லிட்டேன். இது எங்க போயி முடியப்போகுதோ? சீக்கிரம் வந்து தொலை” என்றது எலி.

எறும்புத்தின்னி ஆர்வமாய் ஜாடியை நெருங்கியது. நெருங்க நெருங்கப் பாயசத்தின் வாசனை மனதை மயக்கியது. ஜாடிக்குள் கொஞ்சம் பாயசம் இருக்கும் போலும். அந்த ஜாடியை யானை மாமாவைத் தவிர வேறு யாராலும் தூக்கிக் கவிழ்க்க முடியாது. எனவே எறும்புத்தின்னி ஜாடியின் மேல் ஏறித் தன்னுடைய நீளமான நாக்கை உள்ளே செலுத்திப் பாயசத்தை உறிஞ்சியது. சுவையில் மெய் மறந்தது. சில நொடிகளிலேயே மிச்சமிருந்த பாயசமெல்லாம் காலி. சந்தோஷமாய் எலியைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டது.

இவ்வளவு சுலபமாய் நாகமணியைத் திருடிவிட்டோம் என்பதை அவைகளால் நம்பவே முடியவில்லை. இன்னும் சில நாட்களுக்குக் காட்டை விட்டு யாரும் வெளியேறிவிட முடியாது. அதுவரை யாரிடமும் அதிகமாய்ப் பேச்சுக்கொடுக்காமல் ஓட்டிவிடவேண்டும். அதன் பின்பு சந்தடியெல்லாம் அடங்கிய பின் பக்கத்துக் காட்டுக்குச் சென்று அந்த ராஜாவிடம் ஒப்படைத்துவிட்டு அது கொடுக்கும் வெகுமானத்தை வாங்கி ஜாலியாக இருக்கவேண்டும். நினைக்கவே இனித்தது. திருடியதற்கு எந்தத்தடயமும் இல்லை. தங்கள் மீது சந்தேகம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. என்ன ஒரு சாமர்த்தியம்!

எலியும், நரியும், எறும்புத்தின்னியும் தங்களது சாதனையைத் தங்களுக்குள்ளேயே சொல்லிப் பெருமையடித்துக்கொண்டன. நாகமணியை பத்திரமாக ஒரு இலையில் சுருட்டி மறைத்துவைத்திருந்தன. காட்டைவிட்டு வெளியேற சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தன.

திருடர்கள் தங்களின் சாதனையில் பெருமையடித்துக் கொண்டிரும்போது திடீரென்று காவல்துரை அதிகாரி கரடி உள்ளே பிரவேசித்தது. அதன் உதவியாளர் மலைப்பாம்பு மூன்று திருடர்களையும் சுற்றி வளைத்துக்கொண்டது. நரி பயத்தை வெளியே காட்டாமல், “ எதுக்காக எங்களைப் பிடிக்கிறிங்க? நாங்க என்ன தப்பு செஞ்சோம்?” என்றது.

கரடி புன்னகையுடன்,

“கண்காட்சியிலிருந்து நாகமணியைத் திருடினதுக்காக “ என்றது.

நரி இப்போதும் விட்டுக்கொடுக்கவில்லை,

“ நீங்க சொல்றது ஆதாரமில்லாத பொய் “ என்றது.

கரடி சிரித்தபடியே சொன்னது,

“ எல்லாமே ரொம்ப சாமர்த்தியமா செஞ்சிங்க. ஆனா நாக்கு ருசியைக் கட்டுப்படுத்த முடியாம திருடன் மாட்டிக்கிட்டான். நாங்கள் புலனாய்வுக்காகத் திருட்டு நடந்த இடத்தை அலசிப் பார்த்தோம் எந்த தடயமும் கிடைக்கலை. அப்பதான் சமையல்கார யானை மாமா சொன்ன ஒரு விஷயம் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தது. ராத்திரி கண்காட்சி முடிஞ்சி அவர் போகும்போது பாயச ஜாடியில கொஞ்சம் பாயசம் இருந்துருக்குது. ஆனா காலைல வந்து பாக்கும்போது பாயசம் இருந்த அடையாளம் கூட இல்லாம சுத்தமா நக்கப்பட்டிருக்குது. அந்த ஜாடியைத் தூக்கிக் குடிக்க யானைமாமாவைத் தவிர யாராலயும் முடியாது. ஆனா நேத்து ராத்திரி எந்த யானையும் வந்து திருடினதுக்குத் தடயம் ஏதுமில்ல. சரி ஒரு எலி உள்ள நுழைஞ்சு குடிச்சிருக்கும்னு நினைச்சா அதுக்கு வாய்ப்பே இல்லை. ஏன்னா அவ்ளோ ஆழமான ஜாடிக்குள்ள இறங்கி வெளிய வர முடியாது. அப்புறம் எப்படிதான் பாயசம் மாயமா போகும்னு விசாரிச்சா, ஒரு எறும்புத்தின்னி நேத்து ரெண்டு மூனு தடவை பாயசத்த விரும்பி வாங்கி வாங்கிக் குடிச்சது சமையல்காரர் மூலமா தெரிஞ்சது. அப்பத்தான் ஒரு விஷயம் மின்னல் மாதிரி மூளையில பளிச்சின்னு மின்னலடிச்சுது. ஜாடியையும் கவுக்கல, ஜாடிக்குள்ளயும் இறங்கல. ஆனா நாக்கை உள்ள விட்டுக் குடிச்சிருந்தா? அவ்வளவு நீளமான நாக்கு நம்ம எறும்புத்தின்னி சாருக்குத்தான இருக்கு? திருடுனதோட போகாம அல்ப ஆசைபட்டதால அவரு மாட்டுனாரு. அவருகூட இருந்ததோட தேவையில்லாம் கேள்வி கேட்டதால நீங்களும் மாட்டுனிங்க. வாங்க கிளம்புவோம் “ என்றது.

“ அடப்பாவி, இவ்வளவு கஷ்டப்பட்டு திருடி கடைசியில நாக்கு ருசிக்கு அடிமையாகி, நீயும் மாட்டி எங்களையும் மாட்டி விட்டுட்டியேடா. வா, உன் உடம்புல இருக்குற செதிலையெல்லாம் பேத்து எடுக்குறேன் “ என்றபடி நரியும், எலியும் புலம்ப, மலைப்பாம்பு அவைகளை இழுத்துச்சென்றது.

"தன் வாயையும் நாவையும் காக்கிறவன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான் ".
நீதிமொழிகள் 21 :23