2018-ல் வெள்ளிவிழாவை கண்ட AJC அங்கம்பாக்கம் திருச்சபையின் வரலாறு:
இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் உண்டு. இம்மக்கள் கிறிஸ்து இயேசுவைப் பற்றி அறியாதவர்கள். இந்த ஊர் வழியாக பாலாறு பாய்கின்றது. எனவே இந்த ஊர் மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். படிப்பறிவு குறைந்தவர்கள். ஊருக்குள் ஒரு தொடக்கப் பள்ளி உண்டு. எனவே பிள்ளைகளை 5 ம் வகுப்பு வரை படிக்க வைப்பார்கள். மேற்படிப்புக்கு தொலைவில் பள்ளிக்கூடம் இருப்பதால் பெற்றோர் அனுப்புவதில்லை. கிராமத்திற்குள் பேருந்து வசதிகளும் இல்லை. (இன்றும் இல்லை).
வறுமை மக்களை வாட்டி வதைத்தது. ஒருவேளை உணவிற்கும் மிகுந்த சிரமப்பட்டனர். இதன் மத்தியிலும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்தனர்.
இந்த கிராமத்திற்குள் அநேக விக்கிரக கோயில்கள் உண்டு. இங்கு அதிகமான சத்துருவின் போராட்டங்கள், தற்கொலை ஆவிகள் மக்களின் உயிரை பறித்துக் கொண்டிருந்த்து.மறுபக்கம், பெண்பிள்ளைகள் வாழ முடியாமல் தங்கள் கற்பை காத்துக்கொள்ள முடியாமல் போராடி கொண்டிருந்தனர். எனவே பெற்றோர் சிறுவயதிலேயே பெண்பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்து விடுவது வழக்கமாயிருந்தது.
சூழ்நிலை இப்படி இருக்கும்போது, இந்த ஊர்மக்களின் கூக்குரல் தேவ சமூகத்தில் எட்டியது.தேவன், மறைந்த போதகர் திரு. ரஸ்லியன் அவர்களை இந்த கிராமத்திற்குள் அனுப்பினார்.போதகர், தன் மனைவி பிள்ளைகளுடன் இந்த ஊருக்குள் 1993ம் ஆண்டு மே மாதம் பள்ளிக்கூட விடுமுறையில் தேவ ஏவுதலின் படி கடந்து வந்தார்கள்.
சில குடும்பங்களுக்குள் சென்று கிராமத்தின் நிலைமையை அறிந்து கொண்டு அம்மக்களுக்கு ஜெபித்து இயேசு கிறிஸ்துவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எடுத்துக்கூறி விட்டு திரும்பி வந்து விட்டார்கள்.
பின்னர் தேவனிடம் இந்த கிராமத்தை முன்வைத்து ஏங்கி ஏங்கி அழுது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். காரணம், தேவன் சொல்லாமல் எந்த காரியத்தையும் போதகர் செய்வதில்லை.அப்பொழுது தேவன் போதகர் ரஸ்லியனோடு பேசினார், “நான் இந்த கிராம மக்களுடைய வேதனையை அறிந்து உன்னை நானே இவர்களை விடுதலையாக்கும்படி தெரிந்து கொண்டேன். நான் உனக்கு முன்னே போய் எல்லா கோணலானவைகளையும் செவ்வையாக்குவேன். நீ இந்த கிராமத்தை எனக்கென்று சுதந்தரித்துக்கொள்வாய். நான் உன்னோடிருந்து செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும்” என்று தேவன் பேசினார்.
தேவன் தம்முடைய இதய விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன் போதகருக்கு அதிக உற்சாகமும் பெலனும் வந்தது. அதேவாரம் ஆதம்பாக்கத்து விசுவாசிகளுடன் கூடி ஆலோசித்து 10 க்கு மேற்பட்டோர் VANல் அங்கம்பாக்கம் ஊருக்கு கடந்து வந்தார்கள்.
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்பட்டது. அந்த ஊர் தலைவரின் வீட்டில் வெயில்காலமாயிருந்தபடியால் அத்தனை பேருக்கும் குளிர்பானம் வழங்கினார்கள். “நாங்கள் சாப்பாடு ஆக்கி போடுகிறோம்” என்றார்கள். அதைத்தாண்டி வரும்போது கைப்பிரதிகள் கொடுத்து இயேசுவை ஊருக்குள் அறிவித்தோம். மக்கள் ஆவலாய் கேட்டார்கள். எங்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தார்கள்.
ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் இருந்த இழப்புகளும் வறுமைகளும் பிள்ளைகளுடைய தரித்திரமும் போதகரை தொடர்ந்து வருத்தி கொண்டேயிருந்தது. மறுவாரமும் சபையாரோடு அந்த கிராமத்திற்கு சென்றார்கள். அன்று VANஐ கொண்டு நிறுத்தியிருந்த இடத்தில் உள்ள வீட்டின் சொந்தக்காரர் ஒருவர் போதகரிடம் வந்து பேச ஆரம்பித்தார். “அதாவது, முதல்நாளில் நீங்கள் ஊருக்குள் வந்து சென்ற பின் எனக்கு சமாதானமாக இருக்கிறது. நான், மனைவி, ஒருமகன், ஒரு மகள் என்று நிறைவுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இன்று மனைவி இறந்துவிட்டாள். மகளும் திருமணமாகி இரண்டு பிள்ளைகளை விட்டு விட்டு இறந்துவிட்டாள். பின்னர் மகனுடைய ஆறுதலில் வாழ்ந்து வந்தேன். கடந்த ஆண்டு மகன் காரணமின்றி தற்கொலை செய்து கொண்டான். எனவே இரவும் பகலும் வேதனையினால் தூக்கமின்றி வாழ்ந்து வருகிறேன். நீங்கள் கடந்தவாரம் வந்து போனபிறகு எனக்கு சற்று ஆறுதலாக சமாதானமாக இருக்கிறது. எனவே நான் மறைந்த என் மகனுடைய பூமியை குறைந்த விலையில் உங்களுக்குத் தருகின்றேன். நீங்கள் அந்த இயேசு நாதருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுங்கள்.அப்பொழுது என் மகன் உள்ளம் சாந்தியடையும்” என்று கூறி ஆலயத்திற்கு இடம் கொடுக்க முன்வந்து கொடுத்தார்கள். இது தேவ திட்டம் என்பதை அறிந்த போதகரும் விசுவாசிகளுக்கு இந்த காரியத்தை தெரியப்படுத்தி அந்த இடத்தை வாங்கினார்கள்.
ஆலய வேலைகள் துவங்கப்பட்டன. AJC ஆதம்பாக்கம் விசுவாசிகளும் போதகர் குடும்பமும் இங்கு தங்கி, இரவு பகல் என்று பாராமல் வேலை செய்தனர். காலையிலும் மாலையிலும் பாடல் பாடியும் தேவனை துதித்தும், ஜெபித்தும் மகிழ்ச்சியடைந்தனர். அங்கம்பாக்கம் கிராமத்திலும் மிகுந்த சந்தோஷமும் உண்டாயிற்று.
ஆலய கட்டுமானப்பணி முடிந்து 1994ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி ஆலயம் பிரதிஷ்டைப் பண்ணப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் சுவிசேஷக் கூட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் கூடி வந்து சுவிசேஷம் கேட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தொடர்ந்து ஆராதனைகள் நடத்தப்பட்டது. மக்கள் படிப்படியாக வெளிச்சத்துக்குள் கடந்து வந்தார்கள். படிப்பே வராது என்று ஒதுக்கப்பட்ட இக்கிராமத்து பிள்ளைகளுக்கு இலவச டியூஷன் ஆலயத்தில் எடுக்கப்பட்டது. தேவன் பிள்ளைகளுக்கு ஞானம் தந்தார். 25 வருட ஊழியத்தின் பலனாக தேவன் பிள்ளைகளை இன்று Engineerராக, Professorsஆக, Teachersஆக, Policeஆக, Nurseஆக உயர்த்தியிருக்கிறார். உலக பிரகாரமாக மட்டுமல்ல, ஆவிக்குரிய நிலையிலும் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு இக்கிராமத்தை ஆசீர்வாதமாக்கியிருக்கிறார்.
“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசாயா 9:2) என்ற வசனத்தின்படியாகவே அங்கம்பாக்கம் கிராமத்தில் தேவன் நடப்பித்த கிரியைகள் அதிகமானதே.
இயேசு கிறிஸ்துவின் முகத்தில் உள்ள மகிமையின் அறிவாகிய ஒளி, இக்கிராம மக்களை சந்தித்ததினால் அநேக குடும்பங்கள் சத்துருவின் பிடியிலிருந்து விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்துவுக்காக ஜீவனுள்ள சாட்சிகளாய் மாறும்படி தேவன் உதவி செய்திருக்கிறார்.
இயேசுவை நம்பி வருகிற அத்தனை மக்களும் தேவனால் விடுதலையாக்கப்பட்டு ஊருக்குள் சாட்சிகளாக வாழ்கிறார்கள். கிராம மக்கள் யாருக்காயினும் கஷ்டம், உபத்திரவங்கள் வந்தால் உடனே “இயேசு கோயிலுக்கு போனால் சுகமாகும்” என்று கிராம மக்களே ஒருவருக்கொருவர் கூறுகிறார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு குழந்தைக்கு (ஆண்) உடல் நலக்குறைவு உண்டாகி செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அங்கு குழந்தை மரித்து விட்டது. பெற்றோர் கதறி அழுதபடி குழந்தையை தூக்கிக்கொண்டு ஆலயத்திற்குள் வந்து, “இயேசுவே என் குழந்தைக்கு உயிர் தாரும்” என்று அழுதார்கள். ஆலயத்தில் சில விசுவாசிகள் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் ஜெபித்தபோது பிள்ளையின் உயிர் திரும்ப வந்தது (இந்த பெற்றோர் இயேசுவை அறியாதவர்கள்). இந்த சம்பவம் கிராமத்திற்குள் பெரியதொரு சாட்சியை உண்டு பண்ணியது. இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை!
கிராமத்துக்குள் தேவன் செய்யும் அற்புதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சத்துருவின் எதிர்ப்புகள் சில காணப்பட்டாலும் சத்துரு வெட்கப்பட்டு தலைகுனிகிறதை காண முடிகிறது.
இந்த கிராமத்திலிருந்து அநேக சகோதர, சகோதரிகள் கர்த்தருடைய சேவையில் உற்சாகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வாலிப சகோதரர்களும், ஒரு வாலிப சகோதரியும் தங்களை அர்பணித்து கர்த்தருக்கு சேவை செய்கின்றனர்.
நிகழும் 2019ம் ஆண்டு ஜனவரி 14ம் நாள், இச்சபை வெள்ளி விழா கண்டது. இந்த விழா மிகவும் சிறப்பாகவும் ஊர் மக்களுக்கு ஆசீர்வாதமாகவும் அமைந்தது. AJC ஐக்கியத்தின் ஸ்தாபகரும், தலைமை போதகருமான கனம். திரு. ஞானதாஸ் ஐயா அவர்கள் இவ்விழாவினில் சிறப்புச்செய்தி கொடுத்தும், இவ்வூழியத்திற்கு உதவியாய் இருந்த பலருக்கு பொன்னாடைகள் போர்த்தியும் கூட்டத்தை சிறப்பித்தார்கள்.
இன்று இக்கிராமத்து விசுவாசிகள் அருகிலுள்ள கிராமங்களாகிய கணபதிபுரம், சிறுமையிலூர், வாடாதவூர் முதலிய பகுதிகளுக்கு கடந்து சென்று சுவிசேஷ ஊழியம், சிறுவர் ஊழியங்களையும் செய்துவர தேவன் இவர்களை கரத்தில் எடுத்து செயல்படுத்தி கொண்டு வருகிறார்.