wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


1 கொரிந்தியர்அதிகாரம் 9
  • 1 நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?
  • 2 நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன், கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.
  • 3 என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது:
  • 4 புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
  • 5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?
  • 6 அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?
  • 7 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
  • 8 இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
  • 9 போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
  • 10 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
  • 11 நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
  • 12 மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்.
  • 13 ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
  • 14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
  • 15 அப்படியிருந்தும், நான் இவைகளிலொன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.
  • 16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
  • 17 நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
  • 18 ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
  • 19 நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
  • 20 யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.
  • 21 நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணாமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
  • 22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
  • 23 சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன்.
  • 24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
  • 25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
  • 26 ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
  • 27 மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.