wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


அப்போஸ்தலருடைய நடபடிகள்அதிகாரம் 20
  • 1 கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்போகப் புறப்பட்டான்.
  • 2 அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்திசொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.
  • 3 அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியாதேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி ரகசியமான யோசனைகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம் பண்ணினான்
  • 4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தொபையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியாநாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.
  • 5 இவர்கள் முன்னாகப் போய், துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.
  • 6 புளிப்பில்லா அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.
  • 7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.
  • 8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.
  • 9 அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.
  • 10 உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.
  • 11 பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டு புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டு, பின்பு புறப்பட்டான்.
  • 12 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
  • 13 பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப்பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.
  • 14 அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
  • 15 அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து,
  • 16 பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம்.
  • 17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
  • 18 அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
  • 19 வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.
  • 20 பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி,
  • 21 தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.
  • 22 இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.
  • 23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
  • 24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
  • 25 இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.
  • 26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
  • 27 எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
  • 28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
  • 29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
  • 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
  • 31 ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
  • 32 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
  • 33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.
  • 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
  • 35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
  • 36 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.
  • 37 அவர்கள் மிகவும் அழுது என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,
  • 38 பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்