wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


லூக்காஅதிகாரம் 14
  • 1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
  • 2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.
  • 3 இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஒய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
  • 4 அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
  • 5 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
  • 6 அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
  • 7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
  • 8 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
  • 9 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
  • 10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.
  • 11 தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
  • 12 அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.
  • 13 நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
  • 14 அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
  • 15 அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றார்.
  • 16 அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
  • 17 விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
  • 18 அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
  • 19 வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
  • 20 வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
  • 21 அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப்போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
  • 22 ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
  • 23 அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
  • 24 அழைக்கப்ட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
  • 25 பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:
  • 26 யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
  • 27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
  • 28 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
  • 29 அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
  • 30 இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?
  • 31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
  • 32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
  • 33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
  • 34 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
  • 35 அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.