wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


ரோமர்அதிகாரம் 16
  • 1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
  • 2 எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.
  • 3 கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
  • 4 அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
  • 5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
  • 6 எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.
  • 7 அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.
  • 8 கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.
  • 9 கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
  • 10 கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.
  • 11 என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.
  • 12 கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திர்போசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.
  • 13 கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.
  • 14 அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரோபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள்.
  • 15 பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.
  • 16 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின், சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
  • 17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
  • 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
  • 19 உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
  • 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
  • 21 என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லுூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
  • 22 இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
  • 23 என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
  • 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
  • 25 ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகலஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,
  • 26 இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்,
  • 27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.