wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


1 இராஜாக்கள்அதிகாரம் 18
  • 1 அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
  • 2 அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது.
  • 3 ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.
  • 4 யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.
  • 5 ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.
  • 6 அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.
  • 7 ஒபதியா வழியில் போகுபோது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;
  • 8 அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்.
  • 9 அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
  • 10 உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.
  • 11 இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
  • 12 நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.
  • 13 யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
  • 14 இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.
  • 15 அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
  • 16 அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
  • 17 ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
  • 18 அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
  • 19 இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
  • 20 அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
  • 21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
  • 22 அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.
  • 23 இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக் கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
  • 24 நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
  • 25 அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
  • 26 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
  • 27 மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
  • 28 அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
  • 29 மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
  • 30 அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;
  • 31 உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
  • 32 அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,
  • 33 விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.
  • 34 பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.
  • 35 அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
  • 36 அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
  • 37 கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
  • 38 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
  • 39 ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
  • 40 அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
  • 41 பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
  • 42 ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,
  • 43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
  • 44 ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றாள்.
  • 45 அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
  • 46 கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.