- 1 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
- 2 மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
- 3 அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.
- 4 நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,
- 5 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,
- 6 அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
- 7 இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.
- 8 உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
- 9 தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.
- 10 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.
- 11 நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.
- 12 தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.
- 13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின் சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்.
- 14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.
- 15 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.
- 16 நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.
- 17 இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.
- 18 அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
- 19 தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
- 20 அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.
- 21 தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.
- 22 அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயைமுதலாய் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான்.
- 23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,
- 24 அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும்.
- 25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.
- 26 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.
- 27 இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.
- 28 உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.
- 29 உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.
- 30 கர்த்தர் உம்மைக் குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது,
- 31 நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.
- 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
- 33 நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.
- 34 நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
- 35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.
- 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.
- 37 பொழுது விடிந்து, நாபாலின் வெறிதெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.
- 38 கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.
- 39 நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.
- 40 தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து, தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது,
- 41 அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.
- 42 பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.
- 43 யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவியானார்கள்.
- 44 சவுல்: தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
1 Samuel 25
- Details
- Parent Category: Old Testament
- Category: 1 Samuel
1 சாமுவேல் அதிகாரம் 25