wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


2 நாளாகமம்அதிகாரம் 4
  • 1 அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.
  • 2 வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்புதொடங்கி மறுவிளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
  • 3 அதின் கீழ்ப்புறமாய் ரிஷபங்களின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் இருந்தது.
  • 4 அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது.
  • 5 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.
  • 6 கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான்; சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் கழுவுவார்கள்; கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளுகிறதற்கு இருந்தது.
  • 7 பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
  • 8 பத்து மேஜைகளையும் செய்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் பண்ணினான்.
  • 9 மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
  • 10 கடல்தொட்டியை கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான்.
  • 11 ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டியவேலையைச் செய்துமுடித்தான்.
  • 12 அவைகள் என்னவெனில், இரண்டுதூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும்,
  • 13 தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னலிலுமிருக்கிற நானூறு மாதளம்பழங்களுமே.
  • 14 ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும்,
  • 15 ஒரு கடல்தொட்டியையும், அதின்கீழிருக்கும் பன்னிரண்டு ரிஷபங்களையும்,
  • 16 செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்.
  • 17 யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.
  • 18 இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலெமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.
  • 19 தேவனுடைய ஆலயத்துக்கு வேண்டிய சகல பணிமுட்டுகளையும்; பொற்பீடத்தையும், சமுகத்தப்பங்களையும் வைக்கும் மேஜைகளையும்,
  • 20 முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
  • 21 சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,
  • 22 பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.