- 1 தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.
- 2 நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
- 3 அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
- 4 அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்த போது மரங்களை வெட்டினார்கள்.
- 5 ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.
- 6 தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,
- 7 அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
- 8 அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.
- 9 ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான்.
- 10 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.
- 11 இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
- 12 அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
- 13 அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
- 14 அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.
- 15 தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
- 16 அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
- 17 அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
- 18 அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.
- 19 அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
- 20 அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
- 21 இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப் போடலாமா என்று கேட்டான்.
- 22 அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.
- 23 அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.
- 24 இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.
- 25 அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்.
- 26 இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின் மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.
- 27 அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
- 28 ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.
- 29 அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள்.
- 30 அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.
- 31 அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
- 32 எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
- 33 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
2 Kings 06
- Details
- Parent Category: Old Testament
- Category: 2 Kings
2 இராஜாக்கள் அதிகாரம் 6