- 1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,
- 2 உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக.
- 3 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில்பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,
- 4 உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள்.
- 5 உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்.
- 6 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர் எல்லாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:
- 7 எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;
- 8 கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல் உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும்.
- 9 இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
- 10 நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
- 11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,
- 12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிறைத்து, தன் நகங்களைக் களைந்து,
- 13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
- 14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளை பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
- 15 இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
- 16 தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.
- 17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.
- 18 தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
- 19 அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்,
- 20 எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.
- 21 அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாம் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.
- 22 கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
- 23 இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.
Deuteronomy 21
- Details
- Parent Category: Old Testament
- Category: Deuteronomy
உபாகமம் அதிகாரம் 21