wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


பிரசங்கிஅதிகாரம் 7
  • 1 பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.
  • 2 விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.
  • 3 நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
  • 4 ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்.
  • 5 ஒருவன் மூடரின் பாட்டைக்கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
  • 6 மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.
  • 7 இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.
  • 8 ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
  • 9 உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
  • 10 இந்நாட்களைப் பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
  • 11 சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு.
  • 12 ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.
  • 13 தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?
  • 14 வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.
  • 15 இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு.
  • 16 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
  • 17 மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?
  • 18 நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகளெல்லாவற்றினின்றும் காக்கப்படுவான்.
  • 19 நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.
  • 20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
  • 21 சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.
  • 22 அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்கு தெரியுமே.
  • 23 இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன். நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.
  • 24 தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?
  • 25 ஞானத்தையும் காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும் மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதை செலுத்தினேன்.
  • 26 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்குமுன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
  • 27 காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்.
  • 28 என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.
  • 29 இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.