- 1 மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
- 2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
- 3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.
- 4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
- 5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
- 6 பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
- 7 அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
- 8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
- 9 இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.
- 10 நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
- 11 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
- 12 அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.
- 13 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
- 14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
- 15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
- 16 நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,
- 17 நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.
- 18 அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
- 19 ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.
- 20 ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
- 21 அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும் போது வெறுமையாய்ப் போவதில்லை.
- 22 ஒவ்வொரு ஸ்திரீயும், தன் தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டுவாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.
Exodus 03
- Details
- Parent Category: Old Testament
- Category: Exodus
யாத்திராகமம் அதிகாரம் 3