wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


எசேக்கியேல்அதிகாரம் 38
  • 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  • 2 மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
  • 3 சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.
  • 4 நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரைவீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்.
  • 5 அவர்களோடேகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.
  • 6 கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.
  • 7 நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.
  • 8 அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,
  • 9 பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.
  • 10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,
  • 11 உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,
  • 12 நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.
  • 13 சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.
  • 14 ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?
  • 15 அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.
  • 16 நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என்தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.
  • 17 உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • 18 இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • 19 அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி,
  • 20 என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
  • 21 என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.
  • 22 கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.
  • 23 இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.