wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


எசேக்கியேல்அதிகாரம் 47
  • 1 பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது.
  • 2 அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.
  • 3 அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.
  • 4 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.
  • 5 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக் கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.
  • 6 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
  • 7 நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.
  • 8 அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.
  • 9 சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.
  • 10 அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும்; அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.
  • 11 ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
  • 12 நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.
  • 13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.
  • 14 சகோதரனோடே சகோதரனுக்குச சரிபங்கு உண்டாக அதைச் சுதந்தரித்துக்கொள்ளக்கடவீர்கள்; அதை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்டுக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும்.
  • 15 தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,
  • 16 ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.
  • 17 அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார்ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடபுறம்.
  • 18 கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.
  • 19 தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது, இது தென்மூலையான தென்புறம்.
  • 20 மேற்புறம் அந்த எல்லைதுவக்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேருமட்டும் இருக்கிற பெரிய சமுத்திரமே; இது மேற்புறம்.
  • 21 இந்த தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக.
  • 22 உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ள பிள்ளைகளைப் பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக.
  • 23 அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.