- 1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
- 2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
- 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
- 4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
- 5 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.
- 6 ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.
- 7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
- 8 பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
- 9 அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
- 10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
- 11 அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.
- 12 எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்.
- 13 ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.
- 14 ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.
- 15 பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.
- 16 அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.
- 17 ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.
- 18 அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?
- 19 இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
- 20 பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.
Genesis 12
- Details
- Parent Category: Old Testament
- Category: Genesis
ஆதியாகமம் அதிகாரம் 12