- 1 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
- 2 ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
- 3 அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
- 4 அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
- 5 லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள்.
- 6 அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:
- 7 சகோதரரே, இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம்.
- 8 இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
- 9 அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
- 10 அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்களண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி,
- 11 தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.
- 12 பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
- 13 நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
- 14 அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
- 15 கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.
- 16 அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
- 17 அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
- 18 அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,
- 19 உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
- 20 அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
- 21 அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம்பண்ணினேன்.
- 22 தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
- 23 லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
- 24 அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,
- 25 அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
- 26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
- 27 விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
- 28 சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
- 29 தேவன் அந்தச் சம பூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.
- 30 பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.
- 31 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
- 32 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
- 33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
- 34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
- 35 அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
- 36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
- 37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
- 38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
Genesis 19
- Details
- Parent Category: Old Testament
- Category: Genesis
ஆதியாகமம் அதிகாரம் 19