- 1 ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.
- 2 அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.
- 3 ஆகையால் நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப் போய், எனக்காக வேட்டையாடி,
- 4 அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.
- 5 ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான்.
- 6 அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:
- 7 நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டேன்.
- 8 ஆகையால் என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்.
- 9 நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.
- 10 உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.
- 11 அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன்.
- 12 ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தையல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான்.
- 13 அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.
- 14 அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.
- 15 பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
- 16 வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு;
- 17 தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.
- 18 அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
- 19 அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்தமகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.
- 20 அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.
- 21 அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்.
- 22 யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,
- 23 அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,
- 24 நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
- 25 அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
- 26 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.
- 27 அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.
- 28 தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.
- 29 ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
- 30 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.
- 31 அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.
- 32 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.
- 33 அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.
- 34 ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.
- 35 அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்
- 36 அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.
- 37 ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்ன செய்வேன் என்றான்.
- 38 ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.
- 39 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.
- 40 உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்திலிருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்.
- 41 யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.
- 42 மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.
- 43 ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய்,
- 44 உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.
- 45 உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.
- 46 பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.
Genesis 27
- Details
- Parent Category: Old Testament
- Category: Genesis
ஆதியாகமம் அதிகாரம் 27