- 1 ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:
- 2 இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- 3 ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்:
- 4 இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?
- 5 இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.
- 6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
- 7 உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- 8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 9 அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- 10 ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கெடாமலும் போயிற்று.
- 11 நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
- 12 அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.
- 13 அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
- 14 பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.
- 15 தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இது நடந்தது.
Haggai 01
- Details
- Parent Category: Old Testament
- Category: Haggai
ஆகாய் அதிகாரம் 1