wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


எரேமியாஅதிகாரம் 5
  • 1 நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
  • 2 அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே.
  • 3 கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
  • 4 அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
  • 5 நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
  • 6 ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
  • 7 இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள்பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்
  • 8 அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
  • 9 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 10 அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.
  • 11 இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 12 அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
  • 13 தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
  • 14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
  • 15 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
  • 16 திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பாக்கிரமசாலிகள்.
  • 17 அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.
  • 18 ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
  • 19 எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக.
  • 20 நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால்,
  • 21 கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.
  • 22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
  • 23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.
  • 24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
  • 25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
  • 26 குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
  • 27 குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.
  • 28 கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.
  • 29 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • 30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.
  • 31 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?