- 1 அதற்கு யோபு பிரதியுத்தரமாக:
- 2 இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்.
- 3 காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
- 4 உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்.
- 5 ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன் சொல்லுவேன். என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
- 6 நான் பேசினாலும் என் துக்கம் மாறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
- 7 இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர்.
- 8 நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும்.
- 9 என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.
- 10 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள், நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
- 11 தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
- 12 நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
- 13 அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.
- 14 நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாயந்தார்.
- 15 நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
- 16 அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
- 17 என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
- 18 பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே, என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
- 19 இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
- 20 என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
- 21 ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.
- 22 குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராத வழியே போவேன்.
Job 16
- Details
- Parent Category: Old Testament
- Category: Job
யோபு அதிகாரம் 16