- 1 யோபு பின்னும் தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
- 2 என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
- 3 என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,
- 4 என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும் என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
- 5 நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.
- 6 என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன், நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.
- 7 என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.
- 8 மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?
- 9 ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?
- 10 அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
- 11 தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
- 12 இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
- 13 பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
- 14 அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
- 15 அவனுக்கு மீதியானவர்கள் செத்து புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.
- 16 அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,
- 17 அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
- 18 அவனுடைய வீடு பொட்டுப்பூச்சி கட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போலுமாகும்.
- 19 அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
- 20 வெள்ளத்தைப்போல திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.
- 21 கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
- 22 அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்.
- 23 ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தைவிட்டு வெருட்டிவிடுவார்கள்.
Job 27
- Details
- Parent Category: Old Testament
- Category: Job
யோபு அதிகாரம் 27