wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


நியாயாதிபதிகள்அதிகாரம் 16
  • 1 பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.
  • 2 அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்று போடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுதும் பேசாதிருந்தார்கள்.
  • 3 சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.
  • 4 அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.
  • 5 அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.
  • 6 அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
  • 7 அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
  • 8 அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.
  • 9 பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல் நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை.
  • 10 அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம் பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
  • 11 அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
  • 12 அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.
  • 13 பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.
  • 14 அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான்.
  • 15 அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,
  • 16 இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,
  • 17 தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
  • 18 அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.
  • 19 அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.
  • 20 அப்பொழுது அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
  • 21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
  • 22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று.
  • 23 பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலி செலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடி வந்தார்கள்.
  • 24 ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.
  • 25 இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
  • 26 சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.
  • 27 அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  • 28 அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,
  • 29 சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,
  • 30 என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
  • 31 பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.