- 1 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது:
- 2 ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
- 3 ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.
- 4 நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
- 5 கர்த்தர் மோசேயை நோக்கி:
- 6 நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களை நிறுத்து.
- 7 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள்.
- 8 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள்.
- 9 ஆகையால் லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
- 10 ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.
- 11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
- 12 இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.
- 13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.
- 14 பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:
- 15 லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.
- 16 அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப்பட்ட பிரகாரம் அவர்களை எண்ணினான்.
- 17 லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- 18 தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
- 19 தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
- 20 தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.
- 21 கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
- 22 அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள்.
- 23 கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும்.
- 24 கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின் குமாரனாகிய எலியாசாப் என்பவன்.
- 25 ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவும்,
- 26 வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
- 27 கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.
- 28 ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
- 29 கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.
- 30 அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.
- 31 அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
- 32 ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.
- 33 மெராரியின் வழியாய் மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
- 34 அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.
- 35 அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்.
- 36 அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும் அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,
- 37 சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.
- 38 ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்.
- 39 மோசேயும் ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படி எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்.
- 40 அதன்பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒருமாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி,
- 41 இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.
- 42 அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.
- 43 ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்று பேராயிருந்தார்கள்.
- 44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
- 45 நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்.
- 46 இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,
- 47 நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
- 48 லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.
- 49 அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,
- 50 ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
- 51 கர்த்தருடைய வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
Numbers 03
- Details
- Parent Category: Old Testament
- Category: Numbers
எண்ணாகமம் அதிகாரம் 3