- 1 கர்த்தர் மோசேயை நோக்கி:
- 2 இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.
- 3 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள்.
- 4 இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான்.
- 5 அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள்.
- 6 மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.
- 7 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.
- 8 அவர்களைக் கொன்றுபோட்டதுமன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.
- 9 அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,
- 10 அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,
- 11 தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து,
- 12 சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
- 13 மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
- 14 அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,
- 15 அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?
- 16 பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
- 17 ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.
- 18 ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.
- 19 பின்பு நீங்கள் ஏழுநாள் பாளயத்திற்குப் புறம்பே தங்குங்கள்; நரஜீவனைக் கொன்றவர்களும், வெட்டுண்டவர்ளைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து,
- 20 அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான்.
- 21 ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:
- 22 அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,
- 23 அவைகளை அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத்தகாதவைகளையெல்லாம் தண்ணீரினால் சுத்தம்பண்ணக்கடவீர்கள்.
- 24 ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்.
- 25 கர்த்தர் மோசேயை நோக்கி:
- 26 பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகைபார்த்து,
- 27 கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.
- 28 மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி,
- 29 அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.
- 30 இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார்.
- 31 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.
- 32 படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,
- 33 எழுபத்தீராயிரம் மாடுகளும்,
- 34 அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது.
- 35 புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.
- 36 யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
- 37 இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.
- 38 மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
- 39 கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
- 40 நரஜீவன்கள் பதினாறாயிரம் பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர்.
- 41 கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.
- 42 யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதிபாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:
- 43 ஆடுகளில் முன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,
- 44 மாடுகளில் முப்பத்தாறாயிரம்,
- 45 கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு,
- 46 நரஜீவன்களில் பதினாயிரம் பேருமே.
- 47 இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.
- 48 பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து,
- 49 உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.
- 50 ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.
- 51 அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
- 52 இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.
- 53 யுத்தத்திற்குப் போன மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காகக் கொள்ளையிட்டிருந்தார்கள்.
- 54 அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.
Numbers 31
- Details
- Parent Category: Old Testament
- Category: Numbers
எண்ணாகமம் அதிகாரம் 31