- 1 அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.
- 2 அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?
- 3 தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.
- 4 கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.
- 5 அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
- 6 அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.
- 7 அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
- 8 அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.
- 9 அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
- 10 சேபாவும் சல்முனாவும் அவர்களோடேகூட அவர்களுடைய சேனைகளும் ஏறக்குறைய பதினையாயிரம் பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்க லட்சத்து இருபதினாயிரம் பேர் விழுந்தபடியால், கிழக்கத்தியாரின் சகல சேனையிலும் இவர்கள் மாத்திரம் மீந்திருந்தார்கள்.
- 11 கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.
- 12 சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.
- 13 யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
- 14 சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.
- 15 அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,
- 16 பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,
- 17 பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்று போட்டான்.
- 18 பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.
- 19 அப்பொழுது அவன்: அவர்கள் என் சகோதரரும் என் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால், உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
- 20 தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.
- 21 அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.
- 22 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.
- 23 அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
- 24 பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
- 25 இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
- 26 பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.
- 27 அதினால் கிதியோன் ஒரு எபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.
- 28 இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக் கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.
- 29 யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான்.
- 30 கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.
- 31 சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.
- 32 பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.
- 33 கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகல்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
- 34 இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,
- 35 கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.
Judges 08
- Details
- Parent Category: Old Testament
- Category: Judges
நியாயாதிபதிகள் அதிகாரம் 8