wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


நியாயாதிபதிகள்அதிகாரம் 9
  • 1 யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:
  • 2 யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
  • 3 அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.
  • 4 அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
  • 5 அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.
  • 6 பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.
  • 7 இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறிநின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
  • 8 விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
  • 9 அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
  • 10 அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
  • 11 அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
  • 12 அப்பொழுது மரங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
  • 13 அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
  • 14 அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
  • 15 அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது.
  • 16 என் தகப்பன் உங்களுக்காக யுத்தம் பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின் கையினின்று இரட்சித்தார்.
  • 17 நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய குமாரரான எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால், அவனைச் சீகேம் பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள்.
  • 18 இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால்,
  • 19 நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவர்களுக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்.
  • 20 இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும் கடவது என்று யோதாம் சொல்லி,
  • 21 தன் சகோதரானாகிய அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.
  • 22 அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்டபின்பு,
  • 23 அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார்.
  • 24 யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம் பண்ணினார்கள்.
  • 25 சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழி நடந்து போகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
  • 26 ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி,
  • 27 வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சத்தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையாட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், புசித்துக்குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள்.
  • 28 அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்?
  • 29 இந்த ஜனங்கள் மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.
  • 30 பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு,
  • 31 இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்.
  • 32 ஆகையால் நீர் உம்மோடிருக்கும் ஜனங்களோடேகூட இரவில் எழுந்து வந்து வெளியிலே பதிவிருந்து,
  • 33 காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின் மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
  • 34 அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.
  • 35 ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பிவந்தான்.
  • 36 காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.
  • 37 காகாலோ திரும்பவும்: இதோ, ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான்.
  • 38 அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்தஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.
  • 39 அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம் பண்ணினான்.
  • 40 அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
  • 41 அபிமெலேக்கு அருமாவில் இருந்துவிட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான்.
  • 42 மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
  • 43 அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.
  • 44 அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.
  • 45 அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.
  • 46 அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.
  • 47 சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
  • 48 அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
  • 49 அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.
  • 50 பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப்போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.
  • 51 அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.
  • 52 அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.
  • 53 அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலெக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது;
  • 54 உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.
  • 55 அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
  • 56 இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
  • 57 சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.