வ.உ.சி சிறையிலிருந்து விடுதலையாக வேண்டிய நாள் அன்று. தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தயாராகிறார். மக்களுக்காக சிறைப்பட்டு உள்ளே வந்திருக்கிறோம். எப்படியும் நம்மை வரவேற்க பெரும் கூட்டம் திரளாக வந்திருக்கும் என்ற நினைப்போடு வெளியே வருகிறார்.
தள்ளாடிய நிலையில் உடம்பில் வலுவற்று, நிற்க முடியாமல் ஒரு தொழுநோயாளியும், நான்கைந்து பேரும் நின்று கொண்டிருந்தனர். வ.உ.சிக்கு பேரதிர்ச்சி. இருந்த போதும் அந்தத் தொழுநோயாளியை அழைத்து நீ யாரப்பா என்கிறார். என்னை அடையாளம் தெரியவில்லையா? நான்தான் உன் நண்பன் சுப்ரமணிய சிவா என்கிறார். மனதை திடப்படுத்திக்கொண்டு நம்முடைய கப்பல் என்னவானது என்கிறார். அது வெள்ளைக்காரர்களின் கைகளுக்கே போய்விட்டது என்கிறார் ஒருவர். வ.உ.சிக்கு ஆத்திரம் தலையைப் பிளந்தது. அதைத் துண்டுதுண்டாக்கி கடலில் எறிந்திருந்தால் கூட அகம் மகிழ்ந்திருப்பேன் என ஆவேசப்படுகிறார். சிறையில் செக்கிழுப்பது தொடங்கி ஆயிரம் தாங்கொணாத் துயரங்களை அனுபவித்தாலும் சிறைக்குள் செல்லும் போது எத்தகைய வெள்ளை மேலாதிக்க எதிர்ப்புணர்வோடு சென்றாரோ அதே உணர்வோடு வெளியே வந்திருந்தார் வ.உ.சி.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் எனும் ஊரில் பிறந்தவர் வ.உ.சி. வழக்கறிஞர் குடும்பப் பின்னணி என்பதால் அவரும் பட்டம் பெற்று வழக்கறிஞராகவே பணி செய்கிறார். வழக்கறிஞராகப் பணியாற்றிய சமயத்திலேயே ஏழை மக்களுக்காக இலவசமாக வாதாடுதல் போன்ற தன்னால் முடிந்த உதவியைச் செய்திருக்கிறார். பின்னாட்களில் பாலகங்காதர திலகர் மற்றும் லாலா லஜபதிராய் ஆகியோரின் கொள்கைகள் மற்றும் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். சுதந்திரப் போராட்டங்கள் அந்தச் சமயத்தில் அகிம்சை, மிதவாதம், தீவிரவாதம் என வெவ்வேறு வடிவங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வ.உ.சிக்கு இந்த வடிவங்களில் எல்லாம் உடன்பாடில்லை.
நமது உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடுகிறோம். சுதந்திரம் வேண்டும் என்று நாம் வீதிகளிலும், மேடைகளிலும் கத்துவது நம் தொண்டை ஈரத்தைதான் வற்றச் செய்யுமேயொழிய ஏகாதிபத்திய அரசிடம் இது எடுபடாது. அவர்களுக்கு சட்ட ஒழுங்கு ரீதியான நெருக்கடிகள் வந்தால் அதைச் சமாளிக்க அவர்களிடம் காவல்(ஏவல்) படை இருக்கிறது. அதை ஏவி சரி கட்டிக்கொள்வார்கள். அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்றால் அவர்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிவிட வேண்டும். அதற்குச் சரியான வழி அவர்கள் பொருளாதரத்தை சீர் குலைப்பது தான் என முடிவெடுக்கிறார். சுதேசி பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறார். எந்தக் கப்பல்கள் மூலம் நம் நாட்டிற்கு வந்து நம் செல்வங்களைச் சுரண்டிக் கொண்டு செல்கிறார்களோ அதில் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்போம் என முடிவெடுத்து சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்குகிறார்.
இந்தியாவின் முதல் சுதேசி கப்பல் ஒரு தமிழனால் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்து நகர (தூத்துக்குடி) கடலில் களம் கண்டது. சுதேசி கப்பல் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. வெள்ளைக்கார அரசுக்கு கடல் போக்குவரத்து ரீதியான பொருளாதாரத்தில் பலத்த அடி. அதையே ஏற்க முடியாமல் இருக்கும் போது சுதேசி கப்பல் மூலம் மக்களிடம் சுதந்திர உணர்வு அதிகமாகிறது என்ற விஷயம் தெரிந்தவுடன் இதற்கு முடிவுகட்ட தயாராகிறது ஆங்கிலேய அரசு. வ.உ.சியின் நிறுவனத்திற்கு கப்பல் வாடகைக்கு கொடுத்த நிறுவனங்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. வெள்ளைகார அரசுக்கு முதல் பயத்தைக் காட்டிவிட்டோம், இத்தோடு இது நின்று விடக்கூடாது என முடிவெடுக்கிறார். தன்னுடைய பரம்பரைச் சொத்துகள் மற்றும் மனைவியின் நகை, உடைமைகள் என அனைத்தையும் விற்று காலியோ, லாவா என இரு கப்பல்களைச் சொந்தமாக விலைக்கு வாங்கி அதை சுதேசி பிரச்சார பீரங்கியாகவும், ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்.
ஆங்கில அரசின் தடையை மீறி ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்படுகிறார். தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. முதலில் சிறைத் தண்டனை 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு 6 ஆண்டுகளாக குறைக்கப்படுகின்றது. ஆனால் 40 ஆண்டுகளில் ஒரு சிறைக் கைதியால் அனுபவிக்கப்படும் வலியை விட இரு மடங்கு வலியை 6 ஆண்டுகளில் அனுபவிக்கிறார். மாடுகள் கூட இழுப்பதற்கு சிரமப்படும் செக்கை சிறையில் இழுத்த அவரது வரலாறெல்லாம் சுதந்திரத்தின் அருமையினை உணராத, முறையாகப் பயன்படுத்தாதவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடம்.
சிறையில் இருந்து அவர் விடுதலை பெற்று வெளியே வரும் போது நடந்த சம்பவம்தான் முதல் பத்தியில் கூறப்பட்டவை. கையில் இருந்த சொத்துகளை எல்லாம் விற்று கப்பல் வாங்கியாயிற்று, வழக்கறிஞர் பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது. இனி வாழ்வின் இறுதிக் கட்டங்களை ஓட்ட பணம் வேண்டும்... என்ன செய்வதென்று யோசிக்கிறார்??? இறுதியில் சென்னை வீதிகளில் மண்ணென்ணெய் விற்று காலம் தள்ளினார்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக அவர் கப்பல் விட்டபோது, அஞ்சி நடுங்கிய அரசு, கப்பலில் பயணச்சீட்டு விலையைப் பாதியாகக் குறைத்தல், கப்பலில் பயணித்தாலே குடை இலவசமாக வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்தது. ஆம்... ஏகாதிபத்திய அரசையே இவ்வாறெல்லாம் மிரள வைத்தவன் தன்னுடைய கடைசி காலங்களில் மண்ணெண்ணெய் விற்று காலத்தை ஓட்டினான் என்பது மனம் ஏற்க மறுக்கும் சற்று கசக்கக் கூடிய உண்மை. ஆனால் இன்று நாம் வாழும் சுதந்திர வாழ்வில் அவரது பங்கு மறக்க முடியாதது.