பல்பீர் சிங் என்ற சர்தார்ஜி ஒருவர் அமேரிக்காவில், நார்த் கரோலினா என்ற கிருத்துவர்கள் அதிகம் வாழும் மாகாணத்தில் குடியேறினார். அவர் உடம்பில் சுத்தமான அக்மார்க் பஞ்ஜாபி இரத்தம் ஓடுவதால், அவரால் கோழிக்கறியையும் மது பானங்களையும் பிரிந்து ஒரு நாள் கூட இருக்க முடியாது. அவரோ திருமணம் ஆகாத ஒட்டி கட்டை வேறு. எவருடைய உதவியையும் எதிர்பாராமல் தனது கை பக்குவத்தில் தானே உணவு தயாரித்து உண்பது அவரது வழக்கம். அவர் சமையல் என்று வந்து விட்டால் நள மஹாராஜனாகவே மாறிவிடுவார். அதிலும் கோழி குருமா செய்தார் என்றால், அதன் மணம் அந்த தெருவையே புரட்டி போட்டு விடும் என்றால் அது மிகையாகாது.
அவர் நார்த் கரோலினாவில் குடியேறிய போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து தடபுடலாக விருந்தே வைத்து விட்டார். அவர் வசித்த பகுதியில் இருந்த அனைவரும் கத்தோலிக்க கிருத்துவர்கள். அதிலும் தங்கள் மத கோட்பாடுகளை ஒரு குறையும் இன்றி கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்கள் இவர் வைத்த விருந்தில் கலந்து கொண்டு அவர் கைவண்ணத்தில் உருவாகிய பன்னீர் மற்றும் மக்கன் (பாலாடை) பதார்த்தங்களோடு கோழி குருமாவையும் ருசித்து ஒரு பிடி பிடித்தனர். அவரது கை பக்குவத்தை வெகுவாக பாராட்டவும் செய்தனர். இதன் பிறகு ஒரு சிலர் அவ்வப்போது தாங்களாகவே கோழியை வாங்கி வந்து அவரை சமைக்க வைத்து தங்கள் நாவிற்கு இன்பம் அளித்தும் வந்தனர். விரைவில் பல்பீர் சிங் அந்த மக்களில் ஒருவராகவே ஏற்றுக்கொள்ள பட்டுவிட்டார்.
சில மாதங்கள் உருண்டோடின. கிருத்துவர்கள் Lent என்று அழைக்கும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் பொழுது தொடங்கியது. இந்த சமயத்தில் கிருத்துவர்கள் புலால் உணவை தவிர்ப்பது வழக்கம். ஆனால் நாம் ஏற்கனவே அறிந்தது போல் நமது பல்பீர் சிங்கால் கோழிக்கறி உண்பதையும் மது அருந்துவதையும் விட முடியவில்லை. அவர் வழக்கம் போல தனது வீட்டிற்கு முன்னால் உள்ள புல் வெளியில் அமர்ந்து கோழிக்கறியையும் மது அருந்துவதையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ஒரு நாள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவரை சந்தித்து தாங்கள் அந்த 40 நாட்களுக்கு புலால் உணவை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் நமது பல்பீர் சிங்கோ தான் ஒரு சுத்தமான பஞ்ஜாபி என்பதால் தன்னால் கோழிக்கறி உண்பதை நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விடுகிறார்.
இதனை அடுத்து அந்த கிருத்துவர்கள் கூடி இதற்கு என்ன வழி என்று ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அந்த கூட்டத்திலேயே வயது முதிர்ந்த மற்றும் சிறந்த அறிவாளியாக கருதப்படும் முதியவர் ஒருவர், பல்பீர் சிங்கை கிருத்துவராக மாற்றுவது ஒன்றே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று கூறுகிறார். நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு அனைவரும் இதனை ஏற்றுக் கொள்ள, பல்பீர் சிங்கை வலுக்கட்டாயமாக தூக்கி வந்து அந்த ஊரில் உள்ள சர்ச்சில் ஞானஸ்நானம் செய்து வைத்து கிருத்துவராக மாற்றி விடுகிறார்கள். இதன் பிறகு அவர்கள் பல்பீர் சிங்கிடம் இனி நீர் பல்பீர் சிங் இல்லை. இன்று முதல் நீர் பீட்டர். நீர் ஒரு கிருத்துவர் ஆகிவிட்டீர். ஆகையால் இந்த Lent period முடியும் வரை புலால் உணவை தொடக்கூடாது என்று கூறி அவரை திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.
இனி பல்பீர் கோழிக்கறி உண்பதை தவிர்த்து விடுவார் என்று நம்பியிருந்த அந்த மக்களின் தலையில் பேரிடி இறங்கியது. அடுத்த நாளும் கூட பீட்டராக மாறிவிட்ட பல்பீர் சிங்கின் வீட்டில் இருந்து கோழிக்கறி சமைக்கும் வாசம் மூக்கை துளைக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்த கிருத்துவர்கள் கோபத்துடன் பல்பீர் சிங்கின் வீட்டை முற்றுகையிடுகிறார்கள். உமக்கு இத்தனை அறிவுரை கூறிய பிறகும் கூட இந்த Lent சமயத்தில் இப்படி புலால் உணவை உண்ணுகிறீர்களே நீர் ஒரு கிருத்துவரா???? என்று கேட்டு அவரை சரமாரியாக ஏசுகிறார்கள். ஆனால் பல்பீர் சிங்கோ தான் ஒரு தவறும் செய்யவில்லை. புலால் உணவை அறவே தொடவில்லை என்று சத்தியமே செய்கிறார். ஆனால் கோழிக்கறி சமைக்கும் வாசனை அவர் வீட்டில் இருந்து தான் வருகிறது. ஆகவே உள்ளே சென்று ஆராய்வது என்று முடிவு செய்து அந்த கிருத்துவர்கள் அவர் வீட்டினுள் நுழைகிறார்கள்.
பல்பீர் சிங்கின் சமையலறையில் நுழைந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அடுப்பில் கோழிக்கறி கொதித்து கொண்டு இருக்கிறது. ஆத்திரத்துடன் அவர்கள் பல்பீர் சிங்கை நோக்கி இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவரும் மிகவும் நிதானமாக அது உருளைக்கிழங்கு என்று பதிலளிக்கிறார். கோபம் தலைக்கு ஏற அவர்கள் பல்பீர் சிங்கை பார்த்து இப்படி பச்சையாக பொய்வேறு சொல்கிறீர்களே என்று கேட்க, அவரும் நிதானமாக நான் அந்த கோழியின் மீது நீரை தெளித்து இது நாள் வரை கோழி என்று அறியப்பட்டு வந்த நீ இன்று முதல் உருளைக்கிழங்காக மாற இந்த புனித நீரால் #ஞானஸ்நானம் செய்து வைக்கிறேன் என்று நீங்கள் #எனக்கு செய்தது போல் செய்து விட்டேன். ஆகவே இது உருளைக்கிழங்கு தான் என்று கூற, அந்த கிருத்துவர்கள் மயக்கமே போட்டு விழுந்தார்கள்.
கட்டாய மதமாற்றம் இப்படித்தான் முடியும்.