wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

சந்நியாசி ஒருவர் தனக்கு எண்ணெய் வேண்டுமென்று ஒரு ஒலிவ மரக்கன்றை நட்டார். அன்று இரவு ஜெபத்தில், 'கர்த்தாவே இந்த ஒலிவ மரக்கன்றின் மெல்லிய வேர்கள் தண்ணீர் குடித்து பெரிதாக, இதற்கு மழை தேவை. சிறு தூரலை அனுப்பும்' என்று ஜெபித்தார். தேவன் சிறு மழையை பெய்ய செய்தார். மறுநாள் 'ஆண்டவரே, என் மரத்திற்கு சூரிய வெப்பம் வேண்டும்' என்றார். சூரியனும் பிரகாசித்தது. இப்பொழுது 'இதன் பாகங்கள் உறுதிப்பட கடும் பனி வேண்டும்' என்றார். இதோ அந்த சின்ன மரத்தில் பனித்துளிகள் மின்னின. ஆனால் அந்த செடி சாயங்காலத்தில் வாடிப்போனது.

இந்த சந்நியாசி தன்னை போலொத்த மற்றொரு சந்நியாசியிடம் சென்று தன் கதையை சொன்னார். அந்த சந்நியாசி 'நானும் ஒரு சின்ன மரம் நட்டேன். இதோ பாரும் அது செழித்து ஓங்குவதை. நான் மரத்தை தேவனிடம் நம்பிக்கையாய் விட்டுவிட்டேன். அதை உண்டாக்கினவர் அதற்கு இன்னது தேவை என்பதை என்னை விட நன்றாக அறிவார். நான் ஒரு நிபந்தனையும் வைக்கவில்லை. தேவனே அதற்கு புயலோ, வெயிலோ, காற்றோ மழையோ எது தேவையோ அதை அனுப்பும். சிருஷ்டித்த நீர் அதன் தேவைகளை அறிவீர்' என்று ஜெபித்தேன் என்றார். இந்த அழகான உவமையை சார்லஸ் கவ்மேன் அம்மையார் தனது புத்தகமொன்றில் எழுதியிருந்தார்.

நம்முடைய பிதாவாகிய தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்து முடிப்பவர். ஆனால் நாமோ தேவன் இப்படி இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையில் செயல்பட வேண்டும் அல்லது ஆசீர்வதிக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறோம். நாம் விரும்பும் காரியங்கள் நிறைவேறாமல், நாம் விரும்பாத காரியங்கள் நடக்கும்போது தேவன் என்னை மறந்து விட்டார் என்று நினைக்கிறோம்.

ஆபிரகாம் கூட இப்படி ஒரு சூழ்நிலையில் மனம் பதறி தேவனிடத்தில் விண்ணப்பம் செய்தார். சாராள் மூலம் தேவன் கொடுத்த வாக்குதத்தம் தாமதமானபோது, ஆகார் மூலம் ஒரு சந்ததியை உருவாக்கி, 'இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக' என்று தேவனுக்கு ஒரு ஆலோசனை சொல்லி விண்ணப்பம் செய்கிறார். இதன் விளைவு அந்த ஆகாரின் நிமித்தமாகவும், மகன் இஸ்மவேலின் நிமித்தமாகவும் அவர் பெற்ற மனஉளைச்சல் ஏராளம். இன்னும் இஸ்ரவேலர் அதன் பலனை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.

பிரியமானவர்களே, நமது அன்றாட வாழ்விலும் அநேக காரியங்களில் 'தேவனே நீர் இப்படி செய்யும், இந்த படிப்பை படித்தால் தான் என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும், எனக்கு வாழ்க்கை துணையாக வரும் பெண் இந்த குறிப்பிட்ட படிப்பை படித்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும்' என்று பலவிதமான ஆலோசனைகளை தேவனுக்கு கொடுத்து கொண்டேயிருக்கிறோம். நாம் விரும்புவுது தவறல்ல, ஆனால் அதைவிட மேலான காரியத்தை தேவன் திட்டமும் தெளிவுமாக நமக்காக முன்குறித்து வைத்துள்ளார். ஆகவே சகலத்தையும் நேர்த்தியாய் ஆளுகை செய்யும் தேவனை நம்பி அவர் சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை சரியான வழியில் நடத்துவார். ஆமென் அல்லேலூயா!

அவர் நேரத்தில் அவர் நேரத்தில்
அழகுற வனைகிறார் எல்லாம்
அவர் நேரத்தில்
தேவா காண்பியும் அன்றாடம்
கற்று தாரும் உம் வழியை
நீர் சொன்னதெல்லாம் செய்வோம்
உம் நேரத்தில்

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். - (பிரசங்கி 3:11).