wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் எல்லாக் குற்றங்களுக்கும் பெரும்பாலும் மரணம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது. மன்னிப்பு என்பதும், கருணை என்பதும் அங்கே சிறிதளவும் இல்லை. ஊர் மத்தியில் உள்ள ஒரு பொதுவான இடத்தில் குற்றவாளிகளைத் தூக்கில் இடுவதும், பல மணி நேரம் அந்தப் பிணத்தை அங்கேயே தொங்க விடுவதும் அங்கே சர்வ சாதாரணம். ஒரு பலகையில் அந்த நபர் செய்த குற்றத்தையும் பெரிதாக எழுதித் தூக்கு மரத்துக்கு அடியில் வைப்பார்கள்.

அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்குக் குடும்பத்தில் நிறைய பண நெருக்கடிகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் கடன் நெருக்கடிகள் சமாளிக்க முடியாமல் பெருகின. மிகவும் வேதனைப்பட்டான். அவன் வேலை செய்யும் இடத்துக்கு அருகில் ஒரு நகைக் கடை இருந்தது. மதிய வேளையில் எல்லாரும் சாப்பிடச் செல்லும்போதும் கடை திறந்தே இருக்கும். ஒரு சின்ன பையன் மட்டும் காவலாக உட்கார்ந்திருப்பான். அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் மிகக் கடுமை என்பதால் யாரும் திருட முயலுவது அரிது.

இளைஞனுக்கு ஒரு யோசனை தோன்றியது. யாருமே இல்லாத நேரத்தில் கொஞ்சம் நகைகளைத் திருடிவந்துவிட்டால் தன்னுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். பெண்களைப் போல முக்காடு போட்டுக்கொண்டு போய் அந்தச் சின்னப் பையனை ஏமாற்றி, மிரட்டி நகைகளைக் கொள்ளை அடித்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று திட்டம் தீட்டினான்.

அவனது எண்ணம் சில நாட்களிலேயே பலித்தது. கடையில் இருந்தவர்கள் ஒரு நாள் அனைவரும் அந்தச் சிறுவனை மட்டும் வைத்துவிட்டு மதிய உணவுக்குக்காகச் சென்றுவிட்டார்கள். இளைஞன் திட்டப்படியே பெண்ணைப் போல முக்காடு போட்டுக் கொண்டு கடைக்குள் சென்றான். நகைகளைப் பார்வையிடுவதைப் போல சுற்றிலும் பார்த்தபடி திடீரென்று கத்தியை எடுத்து அந்தச் சிறுவனை மிரட்டிக் கைக்கு அகப்பட்ட நகைகளை எடுத்து மூட்டைகட்டிக் கொண்டான்.

திடீரென்று எதிர்பாராத விதத்தில் அந்தச் சிறுவன் அவனை மேசையில் இருந்த கணமான பித்தளைப் பூச்சாடியால் அடித்து அவன் ஓடவிடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். இளைஞனுக்குத் தலை சுற்றியது. வலியில் கண்கள் இருண்டன. தாமதித்தால் சிக்கிக்கொள்வோம் என்பதை உணர்ந்தான். ஆத்திரத்தில் கையில் இருந்த கத்தியால் சிறுவனை சரமாரியாகக் குத்தினான். சிறுவன் செத்து விழுந்ததும் நகை மூட்டையைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினான்.

நகைக் கடையில் இருந்து யாரோ ஒரு பெண், ஆணின் வேகத்தில் ஓடி வருவதை அந்தத் தெருவில் சென்ற ஒரு மனிதன் பார்த்துவிட்டு, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கூக்குரலிட்டான். சிக்கிக் கொள்வோமோ என்ற பயம், அடிபட்ட வலி இரண்டும் சேர்ந்து வேதனைப் படுத்த, இளைஞன் வேகமாக ஓடினான்.

ஒடும்போது காலில் ஒரு கல் மோதி இரத்தம் பெருக்கெடுத்தது. தலையில் அடிபட்ட வலியில் கண்கள் இருட்டின. ஓடும்போதுதான் அவனுக்கு புத்தி வந்தது.

“ எப்படி இருந்தாலும் அரசாங்கம் என்னை சீக்கிரம் அடையாளம் கண்டுவிடும். நிச்சயமாக மரன தண்டனைதான் கிடைக்கும். போட்ட திட்டமெல்லாம் பாழாய்ப்போனதே. உயிரோடு இருந்தாலும் உழைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கடன்களை அடைத்திருக்கலாம். பெற்றோருக்கும், தம்பி, தங்கைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்திருக்கலாம். முட்டாள்தனமாய் எல்லாவற்றையும் வீணாக்கி விட்டேனே” என்று கதறியபடியே வெகு தூரம் ஓடிப்போனான்.

அவன் நின்று மூச்சு வாங்கின இடத்தில் ஒரு வீடு இருந்தது. ஒரு பெரியவர் வாசலில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகே போய் அரை மயக்கத்தில் விழுந்துவிட்டான். அவர் அவனைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச்சென்று படுக்க வைத்தார்.

“ கொலை செய்து திருடிவிட்டேன். என்னைத் தூக்கில் போட்டு விடுவார்கள். அற்ப ஆயுளில் சாகப் போகிறேன். என் குடும்பம் நடுத்தெருவில் நிற்கப் போகிறதே “ என்று புலம்பியபடியே மயக்கமானான். எவ்வளவு நேரம் அப்படிக்கிடந்தான் என்று அவனுக்கே தெரியாது.

அவன் கண் விழித்துப் பார்த்தபோது அவனது காயங்களெல்லாம் கட்டப்பட்டிருந்தன. இரத்தக் கறைபடிந்த அவனது உடைகள் மாற்றப்பட்டுஹ்ட் தூய்மையான ஆடைகள் உடுத்துவிக்கப் பட்டிருந்தன. வலி மிகவும் குறைந்திருந்தது. அவனது படுக்கைக்கு அருகில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதில் பழங்களும் , தண்ணீரும் வைக்கப் பட்டிருந்தன. நல்ல பசியில் வேகவேகமாக அவற்றை உண்டு தண்ணீர் குடித்தான். பெரியவருக்கு நன்றி சொல்ல அவரைத் தேடினான்.

வீடு முழுதும் அவரைத் தேடியும் காணவில்லை. அவனது நகை மூட்டையையும் காணவில்லை. அறையில் இருந்த பெரிய பலகையில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததை வாசித்தான்.

“ உன்னை யாரும் குற்றவாளி என்று பிடித்து தண்டிக்க மாட்டார்கள். உன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்து. இனி பாவம் செய்யாதே”.

அவனுக்கு ஒரே குழப்பம். வெளியில் நடந்து வந்தான். யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. சாலை ஓரமாய் நின்றிருந்த காவலாளிகள் கூட அவனைக் கண்டுகொள்ளவில்லை. “ஊர் அதற்குள் நான் செய்த குற்றங்களை மறந்துவிட்டதா?” குழம்பியபடியே நடந்தான். ஊருக்கு மத்தியில் வந்துவிட்டான்.

அவன் நின்ற இடம் , குற்றவாளிகளைத் தூக்கிலிடும் இடம். வாசலில் இருந்த பலகையில் ,“இன்று காலையில் தூக்கில் இடப்பட்ட குற்றவாளி , பெண் வேடத்தில் வந்து ஒரு நகைக்கடையில் இருந்த சிறுவனை கொன்று , நகைகளைக் கொள்ளையடித்த குற்றங்களைச் செய்தவன்” என்று எழுதி இருந்தது. தூக்கு மரம் இருந்த இடத்தை நோக்கி ஓடினான். அங்கே பலமாய்த் தாக்கிக் காயப்படுத்தப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தவர் அவனுக்கு அடைக்கலம் தந்த பெரியவர்.

இளைஞன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதான். அவன் மனதில் , “ உன்னை யாரும் குற்றவாளி என்று பிடித்து தண்டிக்க மாட்டார்கள். உன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்து. இனி பாவம் செய்யாதே”. என்ற வார்த்தைகள் சத்தமாக ஒலித்துக் கொண்டே இருந்தன.

நம்முடைய பாவங்களையும், பழிகளையும் கூடக் குற்றமே இல்லாத ஏசப்பா ஏற்றுக்கொண்டு நமக்காக சித்திரவதை அனுபவிச்சாங்க இல்லையா? அவங்க நமக்கு செய்த உபகாரத்துக்கு நம்மகிட்ட கேட்கும் கைம்மாறு இதுதான். “இனி பாவம் செய்யாதே”.

ஏசாயா 53 : 5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.