wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர். ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.

சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன், இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.

சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள். ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்” எனறான் அந்த சிறுவன்.

ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக “மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.

முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.

கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம், மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது.

இப்போது கொஞ்சம் பயப்படத் தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது.

ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடிப்பது போல் இருக்கிறது. ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி, மூலையில் பதுங்கிக் கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது.

அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது. நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான், அதில்,“பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது. கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது. பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது. பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்.

இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது. மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம். நோயை விட, அது குறித்த அச்சம் தான் பலரைக் கொல்கிறது. எல்லோரும் இறைவனை நம்புகிறோம். நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான்(ர்), என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது, ​​நம் இதயத்தில் இறைவன் ஒரு காகிதத்தை வைத்திருக்கிறான். அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன், என்று எழுதி இருக்கிறது வருத்தப் பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக இயேசு கூறுகிறார்.

எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம். பயமும் அச்சமும் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். உலகம் பிழைக்கப் போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம்.

இரவுக்குப் பிறகு பகல் வரும் என்பது எப்படி நிச்சயமோ, அதைப்போல் இந்த இன்னலுக்குப் பிறகும் மகிழ்ச்சி வரும்💐