திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள டோனாவூரில் வசித்த ஒரு குடும்பத்தில் பிறந்த கேத்தூராள் மற்றும் எப்சிபா என்ற இரட்டை குழந்தைகள். இவர்கள் பெற்றோர்களுக்கு கீழ்படிவதிலும், ஜெபிப்பதிலும், வேதவாசிப்பிலும் சரியான ஒழுக்கமுள்ளவர்கள். சின்ன பருவத்திலேயே ஞாயிறு பள்ளியில் தவறாமல் கலந்து கொண்டு அந்த ஆலோசனைப்படி நடந்து நற்சாட்சி பெற்றவர்கள்.
அன்று வசதிகள் அதிகம் இல்லாததால் நடந்தே பள்ளிக்கூடம் செல்வது வழக்கம். ஒரு நாள் பள்ளி சென்று வீடு திரும்பும் போது திடகார்த்தமுள்ள பெரிய கொம்புகளுடன் கூடிய ஒரு காளை மாடுவெறிபிடித்து இவர்களுக்கு எதிராக ஓடி வந்தது. பயந்து போன இவர்கள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள். சற்று நேரம் ஓடிய இவர்கள் மாட்டின் அகோர ஓட்டத்தைக் கண்டு அழ ஆரம்பித்தனர்.
அப்பொழுது திடீரென ஞாயிறு பள்ளியில் கற்றுக்கொடுத்தது வேத வார்த்தை கேத்தூராளுக்கு ஞாபகம் வந்தது. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். (சங்கீதம் 50:15)
உடனே நாம் ஜெபிப்போமா என்று எப்சிபாவிடம் கேட்ட மாத்திரத்தில், நாம் தேவனை நோக்கி முறையிடுவோம் என்று எப்சிபா முழங்காலிட தயாராகும் பொழுது கேத்தூராள் ஞானத்தோடு ஒரு காரியத்தை அவளுக்கு எடுத்து சொன்னாள். நாம் இதிலே முழங்காலிடுவதை விட ஓடி ஓடியே நாம் ஜெபிப்போம் என்றதும் அது இருவருக்கும் நல்லதாக பட்டது. அப்படியே செய்தார்கள். தேவன் அவர்களுக்கு புதிய பெலத்தை கொடுத்து அவர்களை அதிலிருந்து தப்பப் பண்ணினார்.
ஏன் இந்த கதை? என்று நீங்கள் கேட்கலாம். இந்த உலகத்தின் பாவம் உங்களை தொடரும் பொழுது பாவம் இருக்கிற இடத்திலேயே நான் நின்று ஜெபித்து வெற்றிபெறுவேன் என்று இருக்கக்கூடாது. மாறாக அதைவிட்டு ஓடி வருவது நமக்கு நியாயமான காரியம். சரிதானே! பாருங்கள் பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறது வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். (1 கொரிந்தியர் 6:18)
யோசேப்பு பாவத்திற்கு விலகியோடினான். ஆகவே ஜெயம் பெற்றான்.
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகி, புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். (1 பேதுரு 2:11,12)
தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!!!