wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

1. ஊழிய அழைப்பு அனைவருக்கும் உண்டு!

2. ஊழியன் என்றால் "வேலைக்காரன்" என்றே அர்த்தம்!

3. எல்லா ஊழியருக்கும் எஜமான் ஒருவரே.

4. சின்ன ஊழியம்(ர்); பெரிய ஊழியம்(ர்); என்றெல்லாம் கர்த்தர் பிரிப்பதில்லை!

5. கர்த்தர் உங்கள் பெலத்தையோ; அறிவையோ பார்ப்பதில்லை. வாஞ்சையோடு வந்தால்; அர்ப்பணித்தால், அவர் உங்களைப் பயன்படுத்த வல்லவர்!

6. பரிசுத்த வேதாகமத்தை 2 அல்லது 3 முறையாவது, ஜெபத்துடன் முழுமையாக வாசித்திருப்பது நல்லது.

7. சம்பாதிக்க ஊழியம் ஆரம்பித்தால், அழிந்துபோவது நிச்சயம்!

8. விசுவாசத்தோடு ஊழியம் செய்ய வாருங்கள். கர்த்தர் உங்களைப் பிழைப்பூட்டுகிறவர்.

9. ஜெபம்; உபவாசம்; வேத தியானம்; விசுவாசம்; அழைப்பில் உறுதி; உண்மை; பரிசுத்தம்; தாழ்மை; ஆயத்தம்; பரிசுத்த ஆவிக்குள் வளர்ச்சி; கிருபையின்மேல் நம்பிக்கை; உதவும் குணம் இவையே முக்கிய தேவைகள்.

10. எந்த ஊழியரின் ஊழியத்தையோ, பிரசங்க உடல்மொழியையோ; வார்த்தை ஜாலத்தையோ காப்பியடிக்காதீர்கள். உங்களுக்கென கர்த்தரிடம் தனிச்சிறப்பு உண்டு! ஒரே மோசே; ஒரே யோசுவா; ஒரே தாவீது; ஒரே தானியேல் போல நீங்களும் ஒருவரே! கர்த்தர் நம்மோடு இருக்கிறாரா என்பதே முக்கியம்!

11. பிரசங்கத்துக்கான காரியங்களை முக்கியமாக பைபிளில் மட்டுமே தேடுங்கள். சுய அனுபவங்கள் எப்போதுமே நல்விளைவை ஏற்படுத்தாது.

12. வேத வார்த்தைகளைத் தாண்டி தீர்க்கதரிசனங்களும் இல்லை; நல்வாழ்வும் இல்லை என்பதில் உறுதியாய் இருங்கள்!

13. எந்த மனிதருக்காகவும், வேத வார்த்தைகளை மாற்றாதீர்கள்!

14. சபை மக்களை தேவ கிருபைக்கு நேராய் மட்டுமே நடத்துங்கள்! ஆசீர்வாத அலப்பல்கள் எப்போதும் வேண்டாம். நம் வாழ்வு, கர்த்தருக்குப் பிரியமாய் மாற, மாற ஆசீர்வாதங்கள் தானாய் வரும் என்று கற்றுக் கொடுங்கள்!

15. பிரசங்கம் செய்யும் போது மக்களின் கண்களைப் பார்த்து, தேவ அதிகாரத்தோடு, தேவ ஆவியானவரின் பெலத்தோடு பேசுங்கள். சுயம் வெளிப்படாதபடி கவனமாயிருங்கள்!

16. எதிர்பாலரை அதிகமாக பார்த்து பிரசங்கம் செய்தல், முரண்பட்ட கருத்துக்களை கொண்டு வரும் என்பதில், எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

17. பிரசங்கத்தில், குறிப்பிட்ட சகோதரியை அல்லது சகோதரனை அடிக்கடி பெயர் சொல்லி குறிப்பிடுவது நல்லதல்ல.

18. அமர்ந்து கேட்கும் மக்கள், ஆடை ஒழுங்கில் கவனமாயிருக்க மாட்டார்கள். தேவ பிள்ளைகள் தங்கள் ஆடைகள்; அமரும் நிலை எல்லாவற்றிலும் ஒழுங்கும்; கிரமமுமாய் இருக்கப் போதியுங்கள். சாத்தான் எவ்வழியிலும் ஊழியர்களை சோதிக்கக் கூடும்.

19. வாலிபரோ அல்லது வாலிபப் பெண்களோ தனித்து ஜெபிக்க வந்தால், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது சபை மூப்பர்கள் அல்லது உடன் ஊழியர்களை கட்டாயம் உடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

20. பிரசங்கம் என்பது உங்கள் தேவைகளையும், திட்டங்களையும் பட்டியலிடுவது அல்ல. வேத வார்த்தைகளை, ஆவியின் சிந்தையோடு, பகுத்துப் போதிப்பது.

21. உங்கள் சபையை விட்டுவிட்டு அடிக்கடி, வெளியூர்; வெளிநாட்டுக்கு பறக்காதீர்கள். உங்கள் மந்தையை, வேறொரு மேய்ப்பன் மேய்ப்பது, தேவ திட்டமல்ல.

22. ஆராதனையில் ஒழுங்கு அவசியம். கூத்து, கும்மாளம், ஆடலோடு பாடல், புகை, இரைச்சல், அநாவசிய இசை இவையெல்லாம் கர்த்தர் அருவருக்கும் செயல். பரவசம் அல்ல பரிசுத்தமே முக்கியம்!

23. விசுவாசிகளுக்கு உணவு ஆயத்தம் செய்திருந்தால், அவர்களோடு சேர்ந்தே உண்ணுங்கள். அதுவும் அளவாக!

24. ஊழியங்களுக்கு செல்லும்போது, குடும்பமாகவோ, உடன் ஊழியர்களோடோ அல்லது குழுவாகவோ செல்வதே எப்போதும் நல்லது.

25. பணக்கார விசுவாசி, ஏழை விசுவாசி என்றெல்லாம் கர்த்தர் வேறுபடுத்துவதில்லை. நீங்களும் அப்படியிருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை.

26. தனிமையில் அடிக்கடி ஜெபித்து, தேவ சமூகத்தில் காத்திருக்கும் போது ஊழியத்தில் வரும் இடர்களிலிருந்து, ஆவியானவர் காப்பாற்றுவார்.

27. கடன் வாங்கி அதை திரும்ப கட்ட முடியாமல் அவதிப்படாதீர்கள். அவமானப்படாதீர்கள்.

28. காணிக்கைப் பணத்தை தவறாக (உல்லாச வாழ்வுக்கு) பயன்படுத்துதல் கூடாது. ஊழியத்துக்கு உங்களையே கொடுத்த நீங்கள், உங்களுடையதையும் கொடுக்க ஆயத்தமாயிருக்க வேண்டும்.

29. உங்களோட நடை, உடை, பாவனைகள் கர்த்தரை மகிமைப்படுத்துமளவு சுத்தமாய், நேர்த்தியாய் (பகட்டாய் அல்ல) இருக்கட்டும்.

30. ஊழியம் செய்ய வேண்டிய இடத்துக்கு சுமார் 1/2 மணி நேரமாவது முன்னதாகவே செல்வது நல்லது. தாமதமாய் செல்வது மக்களுக்கே பிடிக்காது. ஆண்டவருக்குப் பிடிக்குமா?

31. செய்தி வேளை 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை போதுமானது. அதற்குப் பின்னர் மக்களின் கவனம் குறையவும், சிதறவும் வாய்ப்புக்கள் அதிகம்.

32. பிறர் மேல் தேவையின்றி கைகள் வைக்க வேண்டாம். முதியோர், குழந்தைகள் மேல் பரிவோடு கைகள் வைத்து, ஜெபிக்கலாம்.

33. ஊழியர்கள் அனைவரிடமும் பரிவோடு நடக்கக் கடமைப்பட்டோர்.

34. ஊழியர்களுக்கு மிகச்சிறந்த முன்மாதிரி ஆண்டவராகிய இயேசு!. எப்போதும் எதிலும் அவரையே முன் நிறுத்தி நோக்குங்கள். நம் சூழ்நிலையில் இயேசு இருந்தால் என்ன செய்வாரோ, அதையே தாழ்மையோடு செய்ய விழைந்திடுங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!