ஸ்டான்லி ஜோன்ஸ் ஒரு சிறந்த கிறிஸ்தவ மிஷனெரி, பல ஆண்டுகளாக ஒரு விசுவாசிக்கு பண உதவி செய்து வந்தார். ஆனால் ஒரு கால கட்டத்தில் அவருக்கு உதவியளிக்க முடியாத சூழ்நிலையில் உதவியளிப்பதை நிறுத்திக் கொண்டார். இதனால் பாதிப்புக்குள்ளான அந்த விசுவாசி இத்தனை ஆண்டுகளாகத் தனக்கு உதவியளித்து வந்த அந்த மிஷனெரியை பல இடங்களில் அவதூறாகப் பேசினார். செய்தித்தாளிலும் அவரைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டார். ஆகவே ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றவர்கள் முன்பாக வெட்கி தலை குனியும் நிலை உண்டாயிற்று. “இத்தனை ஆண்டுகள் என்னிடத்தில் உதவி பெற்றவர் என்னை அநியாயமாய் தூற்றித் திரிகிறாரே” என மிகவும் மனம் நொந்து போனார். என்ன செய்வது என அறியாமல் திகைத்துப் போனார்.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். அந்த விசுவாசிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை வாசிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவருடைய உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ள முடியும். எந்த சூழ்நிலையிலும் தான் உண்மை தவறியதில்லை என்பதை பிறர் மறுக்க முடியாத அளவிற்கு அந்த கடிதம் அமைந்திருந்தது. கடிதத்தை அனுப்புவதற்கு சற்று முன்பு எதற்கும் இதை நெருங்கிய நண்பனிடம் காட்டி விட்டு அனுப்பலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே அதை நண்பருக்கு அனுப்பி, அதை குறித்ததான கருத்தை தெரிவிக்கும்படி கேட்டார்.
அவரிடமிருந்து மிகச் சுருக்கமான பதில் வந்தது. "மீட்பின் பணிக்கு இது ஏற்றதல்ல" என்று எழுதியிருந்தார். இதைப் பார்த்ததும் அவரது இருதயத்தின் ஆழத்தில் தொடப்பட்டார், மேற்கண்ட வசனம் அவருடன் பேசியது, ஆகவே கடிதத்தை அனுப்பாமல் கிழித்துப் போட்டு விட்டார். "ஆண்டவரே நீரே எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், இந்த பிரச்சனையை பொறுப்பெடும்" என்று ஜெபித்து விட்டு அமைதியோடு விட்டு விட்டார். சில வாரங்கள் கழித்து அந்த விசுவாசியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில் தன்னுடைய எல்லா செயல்களுக்காகவும் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டு எழுதியிருந்தார். தேவனின் செயலைப் பார்த்தீர்களா?