wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

சாது செல்லப்பா ஐயா அவர்கள், தமிழ்நாட்டில் வித்தியாசமான ஊழியத்தை செய்த மூத்த போதகர். *சுத்திகரிக்கும் அக்கினி* என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர். *அக்னி* என்ற பெயரில் சபை ஊழியத்தை உருவாக்கிய ஸ்தாபகர். இவரைக் குறித்து நான் அறிந்தவைகளை தொகுத்துள்ளேன்.

லுத்தரன் சபையை சேர்ந்த இவர், ஆண் செவிலியர் பட்டப் படிப்பைப் (Male Nursing Course) படித்தார். ஆனால் அவருக்கு இந்தியன் ரெயில்வேயில் Mail Sorter வேலை கிடைத்தது. இவருக்கு 1959-ல் கும்பகோணம் லுத்தரன் சபையில் வைத்து விவாகம் நடைபெற்றது.

இவரது துன்மார்க்க ஜீவியத்தால் டி பி வியாதி இவரைத் தாக்கியது. இருமும் போது இரத்தம் தொடர்ந்து வெளியேறியதால் பலவீனப்பட்டார். ரயிலில் விழுந்து தற்கொலை செய்து இறந்துவிட முயற்சி செய்தபோது, ஒலிபெருக்கி மூலமாக தூரத்திலிருந்து தேவசத்தம் கேட்டது. அந்த சத்தம், "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்". உடனே சாது எழுந்து சத்தம் வந்த திசை நோக்கி பயணித்தார். அங்கே L.E.F. சபையின் சுவிசேஷக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் *ஜோஷ்வா டேனியல் ஐயா* பாவத்தைக் குறித்து கண்டித்து, வல்லமையாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அந்த நாளில் செல்லப்பா ஐயா பாவங்களை அறிக்கையிட்டு இரட்சிக்கப்பட்டார். அந்த நாள் 1967 மே 14. சாது செல்லப்பாவின் இரட்சிப்புக்காக எட்டு ஆண்டுகள் போராடி ஜெபித்தவர் அவரது துணைவியார். ஒருநாள் சங் 107 : 17, 20 வசனங்களை வாசித்து ஜெபித்து விட்டு படுக்கைக்கு சென்றார். டி பி நோயிலிருந்து விடுதலை பெற்றார். இரட்சிக்கப்பட்ட பின் LEF சபைக்கு தொடர்ந்து குடும்பமாக சென்றார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ACA சபைக்கு சென்று ஆவிக்குரிய சத்தியத்தில் வளர்ந்தார். இந்த சபையில் *பாஸ்டர் பிரெடி மாக்டன்* என்ற போதகர் மூலமாக குடும்பமாக *முழுக்கு ஞானஸ்நானம்* பெற்றனர்.

அதற்குப் பின்பு வேத ரகசியங்களை கற்றுக்கொள்ள சென்னை தாம்பரத்திலுள்ள *போதகர் பாஸ்கர தாசன்* என்பவரோடு ஐக்கியம் கொண்டார். இவரோடு ஏற்பட்ட ஐக்கியம் சாது ஐயாவின் ஊழியத்தில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பாஸ்கர தாசன் ஐயா, சாது ஐயாவுக்கு ஆவிக்குரிய தகப்பனாக விளங்கினார். நல்ல போதனைகளை போதித்து சாது ஐயாவை நல்ல தேவ ஊழியனாக உருவாக்கினவர் பாஸ்கர தாசன் ஐயா ஆவார். சுவிசேஷகர் டேவிட் இளவரசன், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆகியோரையும் நல்ல உபயோகமான பாத்திரமாக உருவாக்கியவர் பாஸ்கர தாசன் ஐயா அவர்கள். பின்பு பல கூட்டங்களில் சாட்சி சொல்ல உற்சாகப்படுத்தி ஜெபத்தில் தாங்கிய ஜெப நண்பர் *சகோதரர் கிளாடி ஈஸ்வரராஜ்.*

பின்பு கோவைக்கு வேலை டிரான்ஸ்ஃபர் வந்த போது, ஐ.பீ.ஏ. சபையோடு ஐக்கியப்பட்டு *யோபு ஐயாவுக்கு* ஊழியத்தில் உதவியாக இருந்தார். அந்நாட்களில் கோவையில் இவர் செய்த சுவிசேஷ ஊழியம் பிரபலமானது. *மாரநாதா* என பெயிண்டில் பல இடங்களில் எழுதிய வசனம், வசனப் புரட்சியை உருவாக்கியது. அந்நாட்களில் திமுகவில் முக்கியப் புள்ளியாக இருந்த ராமநாதன், "என்னைக் கேலி செய்து இப்படி சுவர் விளம்பரம் செய்துள்ளனர்" எனப் புகார் அளித்தார். ஆனால் சாது ஐயா, முதல் நாள் "மாரநாதா" என எழுதிய இடங்களில் அடுத்த நாள் அதற்குக் கீழே *இயேசு வருகிறார்* என பெரிய எழுத்துக்களில் எழுதினார். சாது ஐயா காவல் துறையால் விசாரிக்கப்பட்டார். சாது அவர்களுக்கு எல்லாம் சுவிசேஷம் அறிவித்தார். திமுக வினர் இவரை சந்தித்து விளக்கம் கேட்ட போது, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவித்தார். இந்த மாரநாதா விளம்பரம் பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக விளங்கியது. "மாரநாதாவா? ராமநாதாவா?" என ஒரு பத்திரிகை கேலி செய்து ராமநாதனை விமர்சித்தது. தொடர்ந்து சாது செல்லப்பா ஊழியம் பரவ ஆரம்பித்தது.

அதற்குப் பின் கோவை டாடாபாத் சாலையில் உள்ள லிவ்ஸி மெமோரியல் ஏ ஜி சபையின் உதவி போதகராக ஊழியம் செய்தார். அந்நாட்களில் இவர் நடத்திய வேதபாடக் கூட்டம், உபவாசக் கூட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. திரள் ஜனங்கள் பங்கு பெற்றனர். அதன்பின் கோவை இரத்தினபுரியில் *அக்னி சபையை* ஆரம்பித்தார். இதுவே:இவர் ஆரம்பித்த முதல் சபை. 1972-ல் ரயில்வே பணியை ராஜினாமா செய்து, முழுநேர ஊழியத்துக்கு வந்தார். அதன் பின் பல இடங்களில், பல சபைகளில் பிரசங்கம் பண்ணினார். 1972 ல் *The‌ Action‌ Team* என்ற குழுவை உருவாக்கி, அநேகம் வாலிபர்களுக்கு ஊழியப் பயிற்சி தந்து ஊழியங்களை உருவாக்கிக் கொடுத்தார். இக்குழுவில் உருவாக்கப்பட்ட மைக்கேல் என்பவர், டிபிஎம் சபையில் சேர்ந்து ஊழியம் செய்து, பின்னர் சென்டர் பாஸ்டராக உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை இரத்தினபுரி சபை, பின்பு கணபதிக்கு மாற்றப்பட்டது. சாது ஐயா கன்வென்ஷன் கூட்டங்களில் பேச வெளியே செல்லும்போது, அவரது மனைவி ரூபி அவர்கள் சபையை நடத்தினார்.

அதற்கு பின்பு ஐயா, திறந்தவெளிக் கூட்டங்களில் சித்தர்களின் பாடல்களை மனப்பாடமாக சொல்லியும் திருவாசகம் போன்ற வசனங்களைக் கூறியும் அந்த வசனங்கள் இயேசு கிறிஸ்துவைக் காட்டுவதாக ஆணித்தரமாக முழங்கினார். பிராமணர்கள் இவர் கூட்டங்களில் கலந்து கொண்டு தொடப்பட்டனர். இந்து மக்கள் மத்தியில் எழுச்சி உருவானது. எதிர்ப்புகளும் உருவாகின. பல இடங்களில் சோடா பாட்டில் வீச்சு, போஸ்டர் கிழிப்பு, பைபிள் எரிப்பு, மேடை தாக்குதல் போன்றவை எதிர்ப்பாளர்களால் தீவிரமாக நடந்தன. இதைக் குறித்த செய்திகள் அன்றைய பத்திரிகைகளில் வெளியாகின. சாது பிரபலமானார். அவரது கூட்டங்களில் திரள் மக்கள் கலந்து கொண்டனர். எதிர்ப்பாளர்களின் சதி, சாது ஐயாவின் கூட்டங்களை விளம்பரப்படுத்தின.

இந்நாட்களில் இவர் வெளியிட்ட *கிறிஸ்தவம் தேவையா?* என்ற புத்தகம் பரபரப்பாக விற்பனையாகியது. தொடர் ஊழியங்களால் இவரது கால்கள் அதிகமாக வீங்க ஆரம்பித்தன. *FEBA* வானொலி ஊழியம் இவரை தேசமெங்கிலும் இன்னும் பிரபலப்படுத்தியது. தமிழகத்தில் சுவிசேஷக் கூட்டங்களில் மிக அதிகமாக எதிர்ப்புகளை, சவால்களை சந்தித்தவர்களில் முதலிடம் சாது செல்லப்பா ஐயாதான். பல கூட்டங்களில் காவல் துறை தலையீடு இருந்தது. காவலர்கள் திரளாக இவர் கூட்டத்தின் பாதுகாப்புக்கு வந்தனர். வந்த காவலர்கள் வசனத்தில் தொடப்பட்டனர். "மரண நதி" என்ற தலைப்பில் அவர் பேசிய ஆடியோ ஒலிநாடா மிக அதிகமாக விற்பனையாகின. 1980 களில் அக்னி பத்திரிகை வாசகர்களுக்காக *அக்னி முகாம்* உருவாக்கி வாசகர்களை உற்சாகப்படுத்தினார். 1975 ல் அக்னி பத்திரிகை ஆரம்பித்தார்.

கடலூர் பகுதியில் டாக்டராக பணி செய்து கொண்டு, கோடை விடுமுறையில் சொந்த செலவில் பல ஊழியர்களை அழைத்து கூட்டம் நடத்தியவர், ஆற்காடு லுத்தரன் சபையைச் சேர்ந்த *சகோதரர் ஜஸ்டின் பிரபாகரன்* அவர்கள். இக்கூட்டத்தில் சாது ஐயா ஒருமுறை பிரசங்கித்தார். அதன்பின் வருடாவருடம் சாது ஐயாவை அழைத்து கூட்டம் நடத்தினார். அதன்பின் சாது ஐயாவின் கூட்டங்களில் ஜஸ்டின் பிரபாகரன் பாடல் பாடினார். சாது ஐயா கொடுத்த எழுப்புதல் செய்திகளின் அடிப்படையில் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களை இயற்றினார். அந்தப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பும் பாடல்களாக எழுப்புதலைப் பற்ற வைத்தது. இதோ அந்தப் பாடல்களின் ஆரம்ப வரிகள்:

  1. 1) நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன், நீ யாருக்கு?
  2. 2) இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
  3. 3) ஐயையோ, ஐயையோ
  4. 4) ஜாதியில் பரிசுத்த ஜாதி
  5. 5) நான் இயேசுவின் படையின் யுத்த வீரன்.

இதன்பின் "கிறிஸ்துவுக்காக மரிக்கவும் தயார்" என்ற பேனர் கோஷத்துடன் பெரிய படை திரட்டி சாது ஐயாவும் ஜஸ்டின் பிரபாகரனும் இணைந்து நடத்திய ஊர்வலம், கடலூர் பகுதியை கலக்கியது. ஊர்வலத்தில் இயேசுவை அறிவித்தனர். இதுபோல பல நகரங்களில் இணைந்து ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து பல மாவட்டங்களில் எழுப்புதல் கூட்டங்களில் பிரசங்கித்த சாது ஐயா, சென்னை வந்தடைந்தார். அப்போது ஏஜி சபை *பாஸ்டர் மோகன்* அவர்களுடன் நல்ல ஐக்கியம் உருவானது. மோகன் பாஸ்டர் சாது ஐயாவை தனது சபையில் தொடர்ந்து உபயோகித்தார். ஜெர்மனி தேசத்தில் பல சபைகளுக்கு பாஸ்டர் மோகனை அறிமுகப்படுத்தி ஊழியத்தை உற்சாகப்படுத்தியவர் சாது ஐயா. எனது ஊழியம் விரிவடைந்ததற்கு சாது ஐயா மிக உதவியாக இருந்தார் என புத்தகத்தில் மோகன் பாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

79 ல் இலங்கை ஊழியம், 80 ல் அரேபியா ஊழியம், தொடர்ந்து அபுதாபி, துபாய், மஸ்கட், ஏமன் போன்ற தேசங்களில் கர்த்தர் இவரை உபயோகித்தார். டென்மார்க்கில் இவரது ஊழியத்தில் பலர் ஆசீர்வதிக்கப்பட்டனர். பிஜி தீவில் இந்து கோயில் வளாகத்தில் சுவிசேஷ கூட்டத்தில் பேசினார். அவரது பிரசங்க மேடைக்கு அருகில் கிருஷ்ணன் சிலை இருந்தது. அந்தக் கூட்டத்தில் பூசாரியும் தேவ வார்த்தையைக் கேட்டான். ஐரோப்பா கண்டத்தில் 21 நாட்கள், 21 இடங்களில் பிரசங்கித்தார். 1987 ல் கிராம ஊழியங்களை தத்து எடுத்து ஊழியம் செய்தார். சென்னையில் சிறுவர்களுக்கென பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். மருத்துவ முகாம்களை நடத்தினார்.

இவருக்குப் பிடித்த வார்த்தை தேவ கிருபையே. பிடித்த பாடல் கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது கிருபையே.

சுமார் 50 ஆண்டுகள் தேவனுடைய ஊழியத்தை‌ செய்து பல அக்னி சபைகளை உருவாக்கியுள்ளார். சுமார் 30 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பத்திரிகையை நான் பல ஆண்டுகளாக வாசித்து வருகிறேன்.

ஊழியத்தில் சாதனை செய்த சத்திய போதகருக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அவர் செய்த ஊழியங்களை கர்த்தாவே ஆசீர்வதியும்!

காவி உடை அணிந்து, கர்ஜனையாக முழங்கி, காவி கூட்டத்துக்கு சுவிசேஷம் அறிவித்த காவியப் போதகனே! உங்களை வருகையின் நாளில் மீண்டும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன். அதுவரையில் உங்கள் பிரசங்கமும் எழுத்தும் ஜனங்களோடு பேசிக் கொண்டிருப்பதாக ! உங்கள் எழுத்துக்களுக்கு என்றும் மரணம் இல்லை!!!

தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள் -மல்கியா 3 : 18