“...முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.” – அப். 11:26
மேலை நாடுகளில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள்தான் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
நம் நாட்டில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவருமே தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளுவதுண்டு.
ஆனால் வேதம், கிறிஸ்துவின் சீஷர்கள்தான் கிறிஸ்தவர்கள் என்று தெளிவுபடுத்துகிறது. அப்படியானால் “சீஷர்கள் யார்” என்று அறிந்து கொண்டால்தான் “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்படும் தகுதி யாருக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஒருவரிலொருவர் அன்பாக இருப்பவர்கள் (யோ. 13:35), மிகுந்த கனிகளைக் கொடுப்பவர்கள் (யோ. 15:8) ஆகியோரைத்தான் இயேசுகிறிஸ்து சீஷர்கள் என்று குறிப்பிடுகிறார். தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் ஒருவன் தனக்கு சீஷனாயிருக்கமாட்டான் என்றும் கூறுகிறார். அதாவது தனக்கு சீஷனாயிருப்பவனுக்கு அவரைப்போன்ற சுயவெறுப்பு, தன்னலமின்மை, பாடுகளை சகித்தல் போன்ற பண்புகள் இருக்க வேண்டுமென்று சொல்கிறார்.
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறப்பதால் நாம் கிறிஸ்தவர்கள் கிடையாது. பிஸ்கெட் டப்பாவில் எலி குட்டிபோட்டால், எலிக்குட்டி பிஸ்கெட் ஆகிவிட முடியுமா? இல்லை... என்றோ ஒருநாள் மனம் திரும்பி, பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டோம் என்ற திருப்தியில் இருந்து விட முடியாது.
மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளை அனுதினமும் கொடுக்க வேண்டும். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும், நீதியிலும், உண்மையிலும் விளங்கும். கனியற்ற அந்தகார கிரியைகளுக்கு உட்படாமல் அவற்றைக் கடிந்து கொள்ள வேண்டும். கனியற்றவர்களாயிராதபடி நற்கிரியைகளைச் செய்யப் பழக வேண்டும். தேவனுக்காக கனி கொடுக்க அர்ப்பணிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர், வேத வசனங்கள் மூலமும், சிட்சைகளை உபயோகித்தும் அதிக கனிகளைக் கொடுக்கும்படி நம்மை சுத்திகரிக்கிறார். இயேசுவையன்றி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. திராட்சை செடியாகிய இயேசுவோடு நாம் கொடிகளாக இணைக்கப்பட்டு, அவரோடு உள்ள ஐக்கியத்தில் நாம் நிலைத்திருந்தால்தான் மிகுந்த கனிகளைக் கொடுப்போம்.
இப்படியாக வேத ஆலோசனைப்படி இயேசுவின் சீஷர்களாக வாழ்பவர்கள் தான் கிறிஸ்தவர்கள். நாம் வேதம் கூறும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா சிந்திப்போம்.