wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

எமில் ஜெபசிங் அவர்கள் 1940 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணவிளை என்ற கிராமத்தில் குருவானவராக பணியாற்றிய நவமணி மற்றும் கிரேஸ் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

எமில் ஜெபசிங் அவர்களின் 17 ம் வயதில் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்து கொண்டிருந்த திரு P. சாமுவேல் மற்றும் ஜீவானந்தம் அவர்கள் மூலமாய் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தேவ இராஜ்ஜியத்தை கட்ட தன்னை அற்பணித்தார்.

வாலிப வயதில் விடுமுறை வேதாகம பள்ளியில் (VBS) அதிக ஈடுபாடு கொண்டு சிறுபிள்ளைகளுக்கு நற்செய்தி பணி செய்ய ஆரம்பித்தார்.

எமில் ஜெபசிங் அவர்கள் தன்னுடைய பண்ணைவிளை கிராமத்தை பற்றி கூறும்போது ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், குருவானவர் ஈசாக்கு போன்ற பல தேவ மனிதர்கள் நற்செய்திபணி செய்த அவ்வூரிலே கிறிஸ்துவின் இரத்தத்தால் இதயக்கறை நீங்கி தூய்மை பெற்று மிஷனெரி தரிசனத்தையும் பெற்றதால் பரிசுத்த பூமி என்று நன்றியோடு நினைவு கூறுவார்.

எமில் ஜெபசிங் அவர்கள் கல்லூரி படிப்பின்போது வாலிபர்கள் மத்தியில் நற்செய்தி பணி செய்து கொண்டு அநேக வாலிபர் ஜெபக்குழுவை உருவாக்கினார்கள்.

கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கிய எமில் ஜெபசிங் அவர்கள் சாயர்புரத்தில் போப் கல்லூரியில் பேராசிரியர் பணி செய்து கொண்டு வாலிபர்கள் மூலம் பல கிராமங்களுக்கு சென்று நற்செய்திபணி செய்து அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆனந்தி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டு கணவனும் மனைவியுமாக குடும்பமாக வாலிபர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் நற்செய்தி பணி செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் இயேசுவானவர் எமிழ் ஜெபசிங் அவர்களை முழுநேர நற்செய்தி பணி செய்ய அழைத்தார். ஆகவே சாயர்புரம் போப் கல்லூரியில் தன்னுடைய பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு நற்செய்தி பணியில் இன்னும் அதிகமாக ஈடுபட்டு அநேக வாலிபர்களை ஆண்டவருக்கு ஆதாயமாக்கினார்.

எமில் ஜெபசிங் அவர்களின் ஜெப ஜீவியம், சாட்சியுள்ள வாழ்க்கை, சகோதர அன்பு, தயாள குணம், ஆகியவற்றால் அநேக வாலிபர்கள் கிறிஸ்துவுக்குள் ஈர்க்கப்பட்டார்கள்.

இந்நிலையில் 1959 ஆண்டு டிசம்பர் 26 ம் நாள் சகோ. சாம் கமலேசன், சகோ. தியோடர் வில்லியம்ஸ், Dr. புஷ்பராஜ், சகோ. ஹரிஸ் ஹில்டன் மற்றும் சகோ. எமில் ஜெபசிங் அவர்கள் இணைந்து உறுவாக்கிய நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவின் (FMPB) பொதுச் செயலாளராக சகோ. தியோடர் வில்லியம்ஸ் அவர்களுக்கு பின் 1965 ம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகள் FMPB ன் பொதுச் செயலாளராக நற்செய்தி பணியை கிராமம் கிராமமாக சென்று அறிவித்தார்கள். ஆகவே தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட திருச்சபைகளில் பெரிய எழுப்புதல் உண்டாயிற்று. இதனால் அநேக வாலிபர்கள் தங்களை நற்செய்தி பணியாளராக அற்பணித்தார்கள்.

எமில் ஜெபசிங் அவர்களுக்கு ஆண்டவர் பல தாலந்துகளை கொடுத்திருந்தார். கடவுளின் வார்த்தையை பிரசங்கிப்பது, ஜெப ஜீவியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைமை, நற்செய்திபணிகள் மீதான வைராக்கியம், ஒவ்வொருவரையும் சமமாக நேசிப்பது போன்ற குணநலன்கள் ஒவ்வொருவரையும் கவர்ந்தது.

வேதாகமத்திலிருந்து என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் எமில் ஜெபசிங் அவர்கள் சரியான பதில் கொடுப்பார். அந்த அளவிற்கு வேத ஞானத்தில் சிறந்து விளங்கினார். அநேக வேதாகம விளக்க உரைகளை எழுதினார்கள்.

இயேசு கிறிஸ்துவின் பெயரைகூட கேட்காத மக்களுக்காக எமில் ஜெபசிங் அவர்களின் இதயம் எப்போதும் துடித்தது. அவருடைய பேனா வலிமையானது. உள்ளத்தை உறுக்கும் வலிமை கொண்டது. அநேக பாடல்களை எழுதினார். அது பலருடைய ஆன்மாக்களை வென்றது.

இந்நிலையில் Trans-world என்ற வானொலி மூலம் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கும் இயக்கத்தின் தெற்காசிய இயக்குனராக செயல்பட்டு, வானொலி செய்தி மூலமாக பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளிலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் எமில் ஜெபசிங் அவர்களின் நற்செய்திபணி ஒவ்வொருவருடைய இதயத்தையும் பலமாய் அசைத்தது. இந்த ஊழியத்தின் மூலம் இரட்சிக்கப்பட்ட மக்களுக்கு India Believers Fellowship என்ற ஊழியத்தையும் ஆரம்பித்தார். இதன் மூலம் ஆங்காங்கே ஆலயங்கள் கட்டப்பட்டன.

இந்த நிலையில் எனது கொள்கை கிறிஸ்து யார் என்றே தெரியாத மக்களிடம் கிறிஸ்துவை கொண்டு சேர்ப்பது; இதை இன்னொருவர் போட்ட அஸ்திபாரத்தின் மேல் கட்டமாட்டேன் என்ற ரோமர் 15 : 20 ன் படி வைராக்கியம் கொண்ட எமில் ஜெபசிங் அவர்கள் 1980 ஆண்டு மே மாதம் 1 நாளில் தூத்துக்குடியில் சில ஜெப வீரர்களோடு சேர்ந்து விஷ்வவாணி என்ற மிஷனெரி இயக்கத்தை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் மிஷனெரிகளை அனுப்ப ஆரம்பித்தார். 1987 இல் 42 மிஷனரிகளோடு இந்த இயக்கம் இந்திய அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

எமில் ஜெபசீங் அவர்கள் பீகார், அஸ்ஸாம், குஜராத், ஒரிசா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் இரட்சிப்புக்காக அரும் பாடுபட்டார். அங்கே மிஷனரிகள் அனுப்பப்பட்டார்கள். இதனால் அங்கே அநேக பணித்தளங்கள் உருவாக்கப்பட்டது. அங்கு முதல் தலைமுறை கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்த இந்திய விசுவாசிகள் ஐக்கியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு சமுதாய நலத்திட்டங்களையும், கல்வி வேலை வாய்ப்புகளையும், மருத்துவ வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். இதனால் விசுவாசிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.

எமில் ஜெபசிங் அவர்கள் மிஷனெரி பணித்தளங்களில் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கு நல்ல சமாரியன் மற்றும் விசுவாசி சங்கதி என்ற அமைப்பை ஏற்படுத்தி இனம், மதம், மொழி என்று பாராமல் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், தையல் மையங்கள், வயது வந்தோர் எழுத்தறிவு இயக்கம், கனிப்பொறி கற்கும் மையங்கள் அமைத்து ஏழைகளின் பொருளாதார வாழ்க்கை உயர்த்தினார். இதனால் அநேகர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்கள்.

எமில் ஜெபசிங் அவர்கள் இந்தியாவில் பல மிஷனெரி இயக்கங்கள், பல நூற்றுக்கணக்கான பிரிவுகளில் நடக்கும் ஊழியங்கள், பல லட்சக்கணக்கான சபைகளை ஒன்றாக இணைக்கும்படி Bless India Mission 2020 என்ற ஐக்கியத்தையும் ஏற்படுத் கடுமையாக செயல்பட்டார்.

அதற்குள் 2000 ம் ஆண்டில் எமில் ஜெபசிங் அவர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் எமில் ஜெபசிங் அவர்கள் பலவீனத்தின் மத்தியிலும் தொடர்ந்து 13 ஆண்டுகள் கர்த்தருக்காய் வைராக்கியமாய் நற்செய்திபணி இந்தியா மட்டுமல்லாமல் வெளி தேசங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்திய மக்கள் மத்தியிலும் நற்செய்திபணி செய்து அவர்களை கிறிஸ்துவுக்குள் பலப்படுத்தினார்கள்.

இந்நிலையில் 73 ம் வயதில் ஓயாமல் நற்செய்திபணி அறிவிப்பதில் வாழ்க்கையின் இறுதிவரை தொய்வில்லாமல் செய்து, 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் நாள் நித்திய இளைப்பாறுதலுக்காக கர்த்தரின் பாதம் சென்றடைந்தார். அவருடைய சரீரம் 2013 டிசம்பர் 23 ம் நாள் தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எமில் அண்ணன் தினம்தோறும் அதிகாலை 4:30 மணிக்கு எழும்பி தேசத்திற்காக ஜெபிக்கும் பழக்கம் உடையவர்கள். இவர் ஜெபம் செய்யும்போது கண்ணீர் தானாகவே வரும். கண்ணீரோடு, அதிக பாரத்தோடு இந்திய தேசத்திற்காக முழங்காலில் நின்ற மகத்தான மாமனிதர்.

ஆனந்தி ஜெபசிங் அம்மையாரும் டெல்லியில் தெருவோர பிள்ளைகள், அனாதை குழந்தைகள், ஏழை சிறுவர்களுக்கு என்று விடுதியை ஏற்படுத்தி தரமான கல்வியை கற்றுக் கொடுத்தார்கள். இதன் மூலம் 1000 சிறுவர் சிறுமியருக்கு ஆங்கில கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவம், போன்றவற்றில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு நற்செய்திபணி மூலம் புதிய இந்தியாவை இன்றுவரை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள். சிறுபிள்ளைகள் ஆனந்தி அம்மையாரை மம்மிஜீ என்று பாசமாக அழைக்கின்றார்கள். இப்படியாக எல்லா குழந்தைகளுக்கும் தாயாக இருந்து சேவை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் கிறிஸ்தவ உலகில் எல்லோரும் பாசமாக எமில் அண்ணன் என்றே அழைப்பார்கள். இவருடைய 45 வருட நற்செய்திபணி இந்திய நற்செய்திபணி சரித்திரத்தில் திருச்சபையின் பொற்காலம் ஆகும். கர்த்தரின் வார்த்தையை பிரசங்கிப்பதில் எமில் அண்ணணுக்கு தனி இடம் உண்டு.

எமில் அண்ணின் புகழ்பெற்ற வாக்கியம் முடியாது என்று துவண்டு விடாதே. முடியும் என்று முரண்டுபிடி. நிச்சயம் சரித்திரம் உன்னை வரவேற்கும் என்பதாகும்.

அவர் வாழ்ந்த காலத்தில் 135 மிஷனெரி தரிசன பாடல்கள் இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் ஒவ்வொருவருடைய உள்ளமெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பல கிறிஸ்தவ நூல்களை எழுதியுள்ளார்கள்.

எமில் ஜெபசிங் அவர்கள் மூலமாய் ஆரம்பிக்கப்பட்ட விஷ்வவாணி மிஷனரி இயக்கம், சுதேச ஊழியர்கள் தலைமையில் இந்தியாவில் 28 மாநிலங்களில், 181 மாவட்டங்களில் 3957 முழுநேர நற்செய்தி பணியாளர்களோடு, 300 க்கும் அதிகமான இந்திய மொழிகளில் 8,335 இந்திய கிராமங்களில் 2834 ஆலயங்களை ஸ்தாபித்து ஆத்துமா ஆதாயம் செய்யும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. 12 இந்திய மொழிகளில் சமர்ப்பண் என்ற மாத இதழ், மிஷனெரி செய்தியை சுமந்து வருகிறது.

எமில் ஜெபசிங் அண்ணண் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் அல்ல; இந்திய கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த விலையுயர்ந்த முத்து. இவர் மூலமாய் கொடுக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள் ஆயிரமாயிரம் வாலிபர்களையும் யுவதிகளையும் அசைத்தது. ஆண்டவர் தமிழ்நாட்டிற்கு கொடுத்த எமில் அண்ணணுக்காக நன்றி செலுத்துவோம். நம்முடைய திருச்சபைகளில் இன்னும் அநேக எமில் அண்ணண்மார்கள் எழும்புவார்களாக. ஆமென்.

இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்தி பணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?... நீ வா... நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.

இந்த மிஷனரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனரியாக, மருத்துவ மிஷனரியாக, சுவிசேஷ மிஷனரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.