wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..

காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்.)